×

கார் டிரைவர் கொலை வழக்கு ஆளுங்கட்சி எம்எல்சி அதிரடி கைது

திருமலை: கார் டிரைவர் கொலை வழக்கு தொடர்பாக ஆளுங்கட்சி எம்எல்சி கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவை சேர்ந்தவர் ஆனந்த்பாபு. இவர் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினராக (எம்.எல்.சி) உள்ளார். இவரிடம் சுப்பிரமணியம் என்பவர் கார் டிரைவராக இருந்தார். சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்து விலகி வேறு இடத்தில் டிரைவர் வேலை பார்த்து வந்தார். கடந்த 20ம்தேதி இவரது வீட்டுக்கு சென்ற எம்.எல்.சி. ஆனந்தபாபு, அவசரமாக வெளியே செல்லவேண்டும் எனக்கூறி தன்னுடன் காரில் அழைத்துச்சென்றதாக தெரிகிறது.

பின்னர் நள்ளிரவு, மீண்டும் காரில் திரும்பிய எம்எல்சி ஆனந்த்பாபு, ‘டிபன் வாங்க சுப்ரமணியத்தை டூவீலரில் அனுப்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்’ எனக்கூறி சடலமாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கடும் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த காக்கிநாடா போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். எம்எல்சி ஆனந்த்பாபுவை கைது செய்யக்கோரி எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தது.

இந்நிலையில் முன்விரோதம் காரணமாக டிரைவர் சுப்பிரமணியத்தை அழைத்துச்சென்று அவரை ஓடும் காரில் இருந்து தள்ளி கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிந்து நேற்றிரவு எம்எல்சி ஆனந்த்பாபுவை கைது செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர்.Tags : Car driver, murder, MLC, arrested
× RELATED கோயம்பேட்டில் குட்கா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது