×

அடுத்த 20,30 ஆண்டுகளுக்கு பாஜகவைமையப்படுத்தி இந்திய அரசியல் இருக்கும்: பிரஷாந்த் கிஷோர்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியை யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியை மையப்படுத்தியே இந்தியாவின் அரசியல் இருக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என தகவல் வெளியான நிலையில் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கான வெற்றி வியூகத்தையும் அவர் வகுத்து அளித்தார். ஆனால் காங்கிரசில் இணையும் திட்டத்தை பிரஷாந்த் கிஷோர் கைவிட்டார்.

பின்னர் தனி இயக்கம் தொடங்குவதாக தெரிவித்த அவர்; காங்கிரசின் சிந்தனை கூட்டம் தோல்வி என்றும் எதிர்வரும் குஜராத், ஹிமாச்சல பிரதேசம், தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அரசியல் நிலவரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்; சுதந்திரத்திற்கு பின் அரைநூற்றாண்டு காலம் யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும், காங்கிரஸ் கட்சியை சுற்றியே இந்திய அரசியல் அமைந்தது என்றும் இதே போல அடுத்த 20 முதல் 30 ஆண்டுகள், பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

எந்த ஒரு சித்தாந்தமும் சிகரத்தை நோக்கி சென்று பிறகு கீழேதான் இறங்கும் என்ற கோட்பாட்டை தான் ஏற்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால், பாஜக கீழே இறங்குவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இருக்காது எனவும் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிதான் பாஜகவுக்கு தேசிய அளவிலான மாற்று, ஆனால் அந்த கட்சி எதிர்க்கட்சியாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பாடம் கற்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வீதிக்கு வந்து போராட வேண்டிய நேரம் இது. ஆனால், என்ன செய்தாலும் ஊடகங்களின் கவனத்தைப் பெற முடியாத போது என்னதான் செய்வது என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்த மனநிலையில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளிவர வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; பீகாரில் மாற்றம் கொண்டு வருவதற்காக அம்மாநில மக்களை நேரில் சந்திக்க இருப்பதாக தெரிவித்த அவர், இதற்காக அரசியல் கட்சி தொடங்கப்பட்டால் அது தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தியதாக இருக்காது என்றும் விளக்கம் அளித்தார்.

Tags : BJP ,Prashant Kishore , The next 20,30 years will be BJP-centric Indian politics: Prashant Kishore
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...