×

பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது வழக்கு பீகார், ஜார்க்கண்டில் 7 இடத்தில் ரெய்டு: அமலாக்கத்துறை நடவடிக்கை

ராஞ்சி: பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைதான பெண் ஐஏஎஸ் அதிகாரியுடன் ெதாடர்புடையவர்களில் பீகார், ஜார்க்கண்டில் உள்ள வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை இன்று ரெய்டு நடத்தியது. ஜார்க்கண்ட் மாநில சுரங்கத் துறை செயலராக ஐஏஎஸ் அதிகாரியான பூஜா சிங்கால் (44) பதவி வகித்து வந்தார். இவர் குந்தி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பூஜாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தியதில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இதன் அடிப்படையில் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பூஜா சிங்கால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜார்க்கண்டில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பூஜா சிங்கால் விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அதன்பின் அவர் மாநில அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் சிபிஐ காவலில் உள்ளார். இந்த நிலையில், பூஜா சிங்காலுடன் தொடர்புடைய நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் சுமார் 7 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Tags : IAS ,Bihar, Jharkhand , Female IAS, Officer, Arrested, 7th Place, Raid
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...