×

கும்பகோணம் அருகே 10, 14ம் நூற்றாண்டு சோழர், பாண்டியர் கால கல்வெட்டு கோயிலில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் அசூர் தான்தோன்றிஸ்வரர் கோயிலில் 10ம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட சோழகாலக் கல்வெட்டும், 14ம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட பாண்டியர் காலக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.இக்கல்வெட்டுக் குறித்து சரஸ்வதி மகால் நூலக நூல் விற்பனைப்பிரிவு எழுத்தர் நேரு அளித்த தகவலின்படியும் ஆசூரைச் சார்ந்த ரவி, கருப்பையன், ராமச்சந்திரன், கவுதமன் ஆகியோரின் உதவியுடன் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கண்ணதாசன், பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தில்லைகோவிந்தராஜன், அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் மேனிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) சின்னையன், சரபோஜி கல்லூரி முன்னாள் முதுகலை மாணவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட குழுவினர் இக்கோயில் கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
முதல் கல்வெட்டு பத்தாம் நூற்றாண்டு எழுத்தமைதியுடனும் சொற்கள் இரண்டிரண்டாக கொண்ட ஐந்து வரிகளில் உள்ளன. இவை நிலம், காவிதி, புத்தூர், அறுநாழி, சோழன் என்னும் சொற்கள் மட்டுமே வாசிக்கும் நிலையில் காணப்படுகின்றன.

இரண்டாம் கல்வெட்டு பதினான்காம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் சிறிது சிதைந்துள்ளது. இதில் காணும் செய்தியானது கீழசுகூர் சபையைப் பற்றியும் இறைவன் பெயர் தான்தோன்றிஸ்வரர் என்பதில் …ன்றி மஹாதேவர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. பிரகாரம் எனப்படும் திருசுற்று புதியதாக அமைக்கப்பட்டது எனவும் இவ்விறைவருக்கு வழங்கப்பட்ட நிலமும் அதன் எல்லைகளும் குறிக்கப்படுகின்றன. இக்கல்வெட்டில் கீ என்னும் உயிர்மெய் நெட்டெழுத்து காணப்பெறுவது எழுத்து வளர்ச்சியில் சிறப்பு வாய்ந்ததாகும்.

இவ்வூர்ச்சபை முதலாம் இராசராசன் காலத்தில் சிறப்புடன் விளங்கியது என்பதும் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டில் இராசேந்திரசிம்மஹ வளநாட்டு இன்னம்பூர் நாட்டு அசுகூர் சேர்ந்த சபையினர் எனக் குறிப்பிடுவதிலிருந்தும் இச்சபை தொடர்ந்து 14ம் நூற்றாண்டுவரை தொடர்ந்து செயல்பட்டுவந்துள்ளது என்பதை கல்வெட்டின் வாயிலாக அறியலாம் என்றனர்.

Tags : Chola ,Pandiyar ,Kumbakonam , Thanjavur: Thanjavur District, Kumbakonam Circle Azure Dhanthonriswarar Temple 10th Century Chola Inscription, 14th
× RELATED ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும்