கடலாடியில் குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்-சீரமைக்க மக்கள் கோரிக்கை

சாயல்குடி :  கடலாடியில் காவிரி கூட்டுகுடிநீர் குழாய் சேதமடைந்து போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், நாள் ஒன்றிற்கு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. பள்ளி அருகே தேங்கி சுகாதாரகேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் கடந்த 2009-10 ஆண்டுகளில் ரூ.616 கோடி மதிப்பீட்டில் கொண்டுவரப்பட்டது. திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சியிலிருந்து சிவகங்கை, பரமக்குடி, முதுகுளத்தூர் வழியாக கடலாடி, சாயல்குடி பகுதிகளுக்கும், சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சிக்கல், ஏர்வாடி பகுதிக்கும்  சிமிண்ட் பூசப்பட்ட ராட்சத இரும்பு குழாய் மூலம் தண்ணீர் செல்கிறது. ஆனால் சாலையோரம் தோண்டப்படும் குழிகள், தண்ணீர் திருட்டுக்காக சேதப்படுத்துதல் போன்ற காரணங்களால் பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஆங்காங்கே கசிந்து வீணாகி வருகிறது.

 இந்நிலையில் கடலாடி யூனியன் அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் குழாய் சேதமடைந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல லட்சம் லிட்டர் குடி தண்ணீர் வீணாகி வருகிறது. பள்ளி மற்றும் குடியிருப்பு, வீடுகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுவதாக மாணவர்கள், பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் உடைப்பு ஏற்பட்டுள்ள சாலை சாயல்குடி, தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலையாகும். இதில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், நடந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. நாள்தோறும் தண்ணீர் வீணாகி வருவதால் மற்ற கிராமங்களுக்கு போதிய அளவில் தண்ணீர் போய் சேராமல், குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே சேதமடைந்துள்ள குழாயை சீரமைக்க வேண்டும் என கடலாடி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: