×

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நீரோடையில் குப்பைகள் கொட்டுவதால் குடிநீர் மாசு ஏற்படுகிறது-பேரணாம்பட்டு ஒன்றியத்தை சேர்ந்த 5 கிராம மக்கள் புகார்

வேலூர் : பேரணாம்பட்டு ஒன்றியத்தில் நீரோடையில் குப்பைகள் கொட்டுவதால் குடிநீர் மாசு ஏற்படுகிறது. எனவே, நகராட்சி குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்று 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். டிஆர்ஓ ராமமூர்த்தி, திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் மனுக்களை பெற்றனர்.

இதில், சத்துவாச்சாரியை சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனை ரித்திகா அளித்த மனுவில், ‘அலமேலுமங்காபுரத்தில் ஆதிதிராவிடர் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறேன். கடந்த மே மாதம் கிரீஸ் நாட்டில் நடந்த ஜூனியர் பளு தூக்கும் போட்டியில் 3ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றேன். எனது தந்தை கல் உடைக்கும் தொழிலாளி. எனவே எனது கல்வி மற்றும் பளு தூக்கும் பயிற்சிக்கு நிதிஉதவி வழங்க வேண்டும்’ என்றார்.

ேபரணாம்பட்டு ஒன்றியம் பல்லாலகுப்பம் உள்பட 5 கிராமமக்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுடன் வந்து அளித்த மனுவில், ‘பல்லாலகுப்பம் ஊராட்சிக்கு சொந்தமான நீரோடையில் இருந்து பல்லாலகுப்பம், ஏரிக்குத்தி, கார்கூரை, செண்டத்தூர், கொத்தமாரிகுப்பம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அந்த இடத்தில் நகராட்சி சார்பில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் அங்கு நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது. குடிநீரும் நிறம் மாறியுள்ளது. இதனை குடித்தால் நோய் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, நீரோடையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

காட்பாடி அடுத்த கொத்தமங்கலத்தை ஒருவர், ₹15 ஆயிரத்தை குறைதீர்வு கூட்டத்திற்கு கொண்டு வந்து அதிகாரியிடம் கொடுத்து, கூட்டுறவு வங்கியில் வைத்த எனது நகையை மீட்டு கொடுங்கள் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது அவர் கூறுகையில், நான் வசிக்கும் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வாங்க சென்றேன். ஆனால் பணத்திற்கு ஏற்ற வகையில் நகையின் எடை இல்லை எனக்கூறிவிட்டனர்.

இதனால் பக்கத்து வீட்டுக்காரரின் நகையை வாங்கி கடன் வாங்கினேன். பின்னர் அதே வங்கியில் தனியாக லோன் வாங்கினேன். அப்போது அவர்கள் பணத்தை தராமல் நகைக்கடனுக்கு ஈடாக அந்த பணத்தை பிடித்துக்கொண்டனர். அந்த பணம் வட்டிக்கு மட்டுமே சரியாகி விட்டதாக கூறினர். எனவே ₹15 ஆயிரத்தை வைத்துக்கொண்டு நகையை பெற்றுத்தரவேண்டும் என்றார்.
அரியூரை சேர்ந்த ரஜினி என்பவர் அளித்துள்ள மனுவில், ‘அரியூர் கண்ணன் நகரில் எனக்கு சொந்தமான இடத்தில் விசி கட்சியை சேர்ந்த 3 பேர் கட்டிடப்பணி செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் தட்டிகேட்டபோது, தகாத வார்த்தைகளால திட்டினார்கள். அரியூர் போலீசில் புகார் கொடுத்தோம்.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு விசி கட்சியை அதே 3 பேர் என்னை அழைத்து, நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிடு என்றனர். என்னால் முடியாது என்றதற்கு சரமாரியாக தாக்கினர். வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். எனது சொத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்றார்.

தோட்டபாளையத்தை சேர்ந்த கமலா என்ற மூதாட்டி அளித்த மனுவில், ‘கடந்த 6 மாதமாக எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை. எனக்கு எந்த வருமானமும் இல்லை. எனது வாழ்வாதாரத்திற்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும், என்றார்.மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மொத்தம் 369 மனுக்கள் அளித்தனர். இதனை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Tags : Vellore ,Peranambatu Union , Vellore: In Peranampattu Union, drinking water pollution is caused by garbage dumped in streams. So, stop dumping municipal garbage
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...