திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்

*காணொலி காட்சியில் முதல்வர் தொடங்கினார்

*துணை சபாநாயகர், கலெக்டர் பங்கேற்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிராமங்களில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை காணொலி காட்சி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில், துணை சபாநாயகர், கலெக்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.தமிழக முதல்வர் அறிவித்துள்ள 7 அம்ச தொலைநோக்கு திட்டத்தில் ஒன்றான, மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி எனும் இலக்கை அடைந்திட, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் ேநற்று தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது. அதன்மூலம், 11.75 லட்சம் ஹெக்டர் பரப்பு சாகுபடிக்கு கொண்டுவரப்படும். அதன்படி, இத்திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாநிலம் முழுவதும் இத்திட்டத்துக்காக ₹227 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 1997 கிராம ஊராட்சிகளில் நேற்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. காணொலி காட்சியில் முதல்வர் தொடங்கி வைத்து பேசுவதை விவசாயிகள் காணும் வகையில், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும், அந்தந்த பகுதிகளில் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு, அரசு நலத்திட்டங்களை வழங்கினர்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 122 கிராம ஊராட்சிகளில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் தொடங்கப்பட்டது. அதையொட்டி, கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் பொலக்குணம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், எம்பி சி.என்.அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது, தென்னங்கன்று, வீட்டுத்தோட்ட காய்கறி விதைகள் தொகுப்பு, தரிசு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் உத்தரவு, பழச்செடிகள், மரக்கன்றுகள் அடங்கிய தொகுப்பு ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், டிஆர்ஓ பிரியதர்ஷினி, வேளாண் இணை இயக்குநர் முருகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அதேபோல், திருவண்ணாமலை ஒன்றியத்தில் வேங்கிக்கால், அண்டம்பள்ளம், காட்டாம்பூண்டி உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

மேலும், மாவட்டம் முழுவதும் 122 இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில், எம்எல்ஏக்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இத்திட்டத்தில், மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கிராமங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: