×

சென்னை ராணி மேரி கல்லூரியில் மே 25ல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை: முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா மே 25ம் தேதி சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெறுகிறது. இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு, திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தொழில்களில் திறன் பயிற்சி பெற்றிடவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, 07.04.2022 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால்,

இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயிற்சியளிக்கும் அரசுத் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா 25.05.2022 அன்று சென்னை இராணி மேரி கல்லூரியில் நடைபெற உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தொழிலாளர்கள் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் இத்திருவிழாவானது மாநிலத்தின் 388 வட்டாரங்களிலும் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை அரங்குகளைத் திறந்து வைத்து, திறன் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சேர்க்கைச் சான்றிதழ்களையும், பணி நியமன ஆணைகளையும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளையும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள். இந்த இளைஞர் திறன் திருவிழாவில் இளைஞர்களுக்கு திறன் குறித்த ஆலோசனைகளை வழங்க கலந்தாய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் துறைகளில் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், பயிற்சி பிரிவுகள், வேலை வாய்ப்புகள் போன்ற தகவல்களை தொழில் துறை வல்லுநர்கள் விரிவாக விளக்கமளிக்க உள்ளார்கள்.

இளைஞர் திறன் திருவிழாவில் பங்கு கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களின் சுய விபரங்களைப் பதிவு செய்து கொள்ள நிகழ்விடத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களையும் ஒருங்கே பெறுவதற்கு பேருதவியாக இருக்கும் இந்த இளைஞர் திறன் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள சுய உதவிக் குழு மகளிர் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சியானது 25.05.2022 முதல் 29.05.2022 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற திறன் பயிற்சிகளைத் தேர்வு செய்திடவும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இளைஞர்கள் இந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டு, இத்திறன் திருவிழாவை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Chief Minister ,MK Stalin ,Youth Skills Festival ,Rani Mary College, Chennai , Chief Minister MK Stalin will inaugurate the Youth Skills Festival on May 25 at Rani Mary College, Chennai.
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...