×

75 ஆண்டுகளுக்கு பின் கோடையில் மேட்டூர் அணையில் நீர் திறந்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : விவசாயிகள் மகிழ்ச்சி!!

சேலம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் 12 டெல்டா மாவட்டங்களின் பாசனத்தேவைக்காக ஆண்டு தோறும் ஜூன் 12ம்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் நீர்மட்டம் 95அடிக்கு மேல் இருக்கும் போது வழக்கமான நாளில் தண்ணீர் திறக்கப்படும். இந்தநிலையில் இந்தாண்டு தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்தமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மே 24ம்தேதி (இன்று) டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவரே தண்ணீரை திறந்துவிட நேற்று மாலை விமானம் மூலம் சேலம் சென்றார். இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையின் வலது கரையில் மேல்பட்ட மதகுகள் பகுதியில் மின்விசையை இயக்கி மலர்தூவி முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவைத்தார். முதற்கட்டமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் தற்போது 19 நாட்களுக்கு முன்னே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ககுறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ல் நீர் திறக்கப்டுவது வழக்கம். மேட்டூர் அணையில் இந்த ஆண்டு மிக முன்னதாக மே மாதத்தில் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வரும் 27ம் தேதி தஞ்சை கல்லணை வந்தடையும். மேட்டூர் அணை திறப்பால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Tags : Mattur ,Chief Minister ,St. K. stalin , Summer, Mettur, Dam, Water, Chief, MK Stalin
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...