கர்நாடகாவில் தனியார் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட சாலை விபத்தில் 9 பேர் பலி...26 பேர் படுகாயம்!!

பெங்களூரு : கர்நாடகாவில் தனியார் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 26 பேர் படுகாயம் அடைந்தனர். ஹுப்பிளி மாவட்டத்தின் வெளியே அமைந்துள்ள பெங்களூர் புனே தேசிய நெடுஞ்சாலையில் தானேபுரம் என்ற பகுதியில் விபத்து நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றுக் கொண்டு பெங்களூரு நகரை நோக்கி சென்று கொண்டு இருந்த போது, தானேபுரம் பகுதியில் நள்ளிரவு 12 மணி அளவில் எதிரே வந்த லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர், பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சொகுசு பேருந்தில் சிக்கி படுகாயம் அடைந்த 26 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. விபத்து  நேரிட்ட அதே இடத்தில் 2 வருடங்களுக்கு முன்பு சொகுசு பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட இடத்தில் அடிக்கடி பேருந்து விபத்து நடப்பதால் அரசு நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: