கொடுங்குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் போது கவனம் தேவை : உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி : கொடுங்குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு முன்பாக அவர்களின் முந்தைய மற்றும் பிந்தைய நடத்தையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த 2011ம் ஆண்டு 3 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த கொலை குற்றத்தில் 2 ஆண் மற்றும் 1 பெண்ணுக்கு 25 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த லலித், எஸ்.ஆர்.பட், திரிவேதி ஆகிய நீதிபதிகள் அமர்வு பல்வேறு அம்சங்களை தெரிவித்துள்ளனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரில் ஒருவர் சிறையில் உள்ள கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகிவிட்டார். சிறையில் கிடைக்கும் சம்பாத்தியத்தை வைத்து குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.

மற்றொரு குற்றவாளி சிறையிலேயே தன்னார்வ தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருகிறார். 3வது பெண் குற்றவாளி எம்ராய்டரிங் எனப்படும் சித்திரத் தையல் கலையில் நிபுணத்துவம் பெற்றவர். இதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள் கொலை செய்யும் போது இந்த 3 பேரின் மனோ நிலை மிகவும் கொடூரமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் தற்போது அவர்கள் நன்னடத்தை உள்ளவர்களாக மாறி இருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.எனவே உச்சபட்ச தண்டனை வழங்கும் முன்பாக குற்றவாளியின் மனநலம் சார்ந்த அறிக்கை, வயது, குடும்ப பின்னணி, கல்வியை கருத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: