×

தைவானை பாதுகாக்க சீனாவுடன் போருக்கு தயார்: அமெரிக்கா அறிவிப்பு

டோக்கியோ: ‘தைவான் மீது சீனா படையெடுக்கும் பட்சத்தில், தைவானை பாதுகாக்க சீனாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் உச்சி மாநாடு நேற்று தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள ஜப்பான் வந்துள்ள அமெரிக்க அதிபர் பைடன் டோக்கியோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா ராணுவத்தை அனுப்புமா?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த அதிபர் பைடன், ``சமீப காலமாக தைவானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை சீனா முடுக்கிவிட்டுள்ளது.

தைவானை வலுக்கட்டாயமாக கைப்பற்ற சீனா முயற்சிக்காது என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அமெரிக்கா தைவானுக்கு வெளிப்படையான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதைத் தவிர்த்து வருகிறது. அதனுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை என்ற போதிலும், தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா ராணுவ ரீதியாக தலையிடும். தைவானை பாதுகாக்க சீனாவுடன் போரிட அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு தைவானைப் பாதுகாக்கும் பொறுப்பு இன்னும் கூடியிருக்கிறது,’’ என்று கூறினார். அதே நேரம், அதிபர் பைடனின் இந்த கருத்துக்கள் அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தை பிரதிபலிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

குறைத்து மதிப்பிட கூடாது
அமெரிக்க படைகள் தைவானை ராணுவ ரீதியாக பாதுகாக்கும் என்ற அதிபர் பைடனின் கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறுகையில், ``சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான பிரச்சினைகளில் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை. சீனாவின் உறுதியை எந்த நாடும் குறைத்து மதிப்பிடக் கூடாது,’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.



Tags : US ,China ,Taiwan , To protect Taiwan US prepares for war with China
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...