×

பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது

அம்பத்தூர்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் சுமதி (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெற்றோரை இழந்த இவர், பெரியம்மா வீட்டில் தங்கி 11ம் வகுப்பு படித்து வந்தார். அங்கும் வாழ பிடிக்காததால், காவல்துறை உதவியுடன் திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து பள்ளி படிப்பை தொடர்ந்தார். இந்நிலையில், பொதுத்தேர்வு எழுத கடந்த 12ம் தேதி பெண் பாதுகாவலருடன் சென்ற சுமதி, தேர்வு அறையில் இருந்து மாயமானார். உடனே பள்ளி நிர்வாகத்திடம் பெண் பாதுகாவலர் கேட்டபோது, ‘சுமதி தேர்வு எழுத வரவில்லை’ என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பாதுகாவலர், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

பின்னர், சுமதியின் பெரியம்மாவை வரவழைத்து விசாரித்தபோது, ‘அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி துரைமுருகன் (28) என்பவரை சுமதி காதலித்து வந்தார். அவர்தான் சுமதியை கடத்தி சென்றிருக்கலாம்’ என்று தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியை தேடி வந்தனர். இதுபற்றி அறிந்த துரைமுருகன், நேற்று முன்தினம் செங்குன்றம் பஸ் நிலையத்தில் சுமதியை தனியாக விட்டு விட்டு மாயமானார். இதனால் செய்வதறியாது திகைத்த சுமதி, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சுமதி அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: நான், பெரியம்மா வீட்டில் வசித்து வந்தபோது, துரைமுருகன் என்னை காதலித்தார். இதுபற்றி அறிந்த பெரியம்மா என்னை கண்டித்து, காப்பகத்தில் சேர்த்தார். ஆனாலும் எங்கள் காதல் தொடர்ந்தது. இந்நிலையில், தேர்வு எழுத வந்த என்னை, ரகசியமாக சந்தித்த துரைமுருகன், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று, போரூரில் சாலையோரத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து தாலி கட்டினார்.
பின்னர், எங்கு செல்வது என்று தெரியாமல் கோவை, மதுரை, தேனி, திருப்பூர் என பல இடங்களுக்கு அழைத்து சென்றார். திருச்சி கீரனூர் கிராமத்தில் ஒரு வீட்டில் தங்க இடம் கேட்டார்.

அவர்களும் கொடுத்தார்கள். அந்த வீட்டில் துரைமுருகன் என்னை பலாத்காரம் செய்தார். பின்னர், போலீஸ் தேடுவது அறிந்து, என்னை செங்குன்றம் பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். அங்கு, கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் திரும்பி வரவில்லை. இவ்வாறு மாணவி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து செங்குன்றம் அடுத்த காவாங்கரையில் பதுங்கி இருந்த துரைமுருகனை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Pokcho , Kidnapping and raping a student who came to write the Plus 1 exam: A youth was arrested in Pokcho
× RELATED மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு...