ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு: போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: போக்குவரத்து ஊழியர்களின் 13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னுக்கு வந்த கீழ்க்கண்ட பிரச்னைகளில் உரிய தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2016 பே- பேண்ட் அடிப்படையில் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு 2.57 காரணி மூலம் பே மேட்ரிக்ஸ் உருவாக்கப்பட வேண்டும். 2019 ஒப்பந்தத்தின் போதான ஊதியத்தை நிர்ணயம் செய்து அதற்குப்பின் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நிர்வாகம் உருவாக்கவுள்ள பே மேட்ரிக்ஸ், ஊதியம் பொருத்தும் முறை இரண்டையும் தொழிற்சங்கங்களுக்கு முன்கூட்டியே அளித்து தொழிற்சங்கங்களின் கருத்தை பெற்ற பிறகே இறுதிப்படுத்த வேண்டும்.  

இந்நிலையில் மகளிர் இலவச பயணம் காரணமாக மேலும் பேட்டா குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே பேட்டா 2018 பேருந்து கட்டண உயர்வின் போது இருந்த பேட்டா விகிதம் 80:20 என்ற விகிதாச்சார அடிப்படையில் மாற்றியமைக்கப்படவேண்டும். மகளிர் இலவச பயணத்திற்காக தமிழக அரசு பேருந்திற்கு நாளொன்றுக்கு சுமார் 5600 ரூபாய் வழங்குகிறது. இதற்குரிய பேட்டாவை நிர்ணயம் செய்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். இன்சென்டிவ் விகிதம் மேற்கண்ட கணக்கீட்டு அடிப்படையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இன்சென்டிவ் முறை தன்னிச்சையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை கைவிட வேண்டும். இன்சென்டிவ் சம்பந்தமாக விவாதித்து இன்சென்டிவ் திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: