ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகத்தில் 26, 27ம் தேதி ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக கூட்டாக அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 26, 27ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் வரும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் ஆகிய 4 காட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளன. வரும் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மேலும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் வீடுவீடாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் தமிழ்நாட்டில் நடத்தப்படும். தமிழ்நாட்டில் இடதுசாரிகளோடு விசிகவும் இணைந்து 4 கட்சிகள் கண்டன இயக்கங்களை நடத்த உள்ளோம். ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 200% வரியை உயர்த்திவிட்டு, அதில் 6% மட்டுமே குறைப்பது சரியாக இருக்காது. ஒன்றிய அரசு உயர்த்திய செஸ் வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். உஜ்வாலா திட்டத்தில் கொடுக்கும் சிலிண்டர் மானியம் ஒரு 6% பேருக்கு தான் கிடைக்கும்.

கொரோனா காலத்தில் 7 கோடி இளைஞர்கள் வேலைகளை இழந்துள்ளனர். அதேபோல் வட மாநிலங்களில் கோதுமை பெரிய பிரச்னை உள்ளது. தமிழகத்திலும் அதுபோன்று நியாயவிலை கடையில் அரசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரே நாளில் 12 ஆயிரம் அளவிற்கு பருத்தி விலை உயருகிறது. ஒன்றிய அரசு பருத்தியை சேமிக்காமல், தனியார் நிறுவனங்களுக்கு விற்றுள்ளதுதான் காரணம். பொருளாதாரத்தில், கார்பரேட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற வகையில் ஒன்றிய  அரசின் நடவடிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. ஒன்றிய அரசுக்கு  எதிராக மிகப்பெரிய வலிமையான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று தான் இந்த இயக்கத்தை முன்னெடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

முத்தரசன்: விலைவாசி உயர்வை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். ஒட்டகத்தில் சுமையை ஏற்றுவது போல் விலைவாசி உயர்வை ஒன்றிய அரசு ஏற்றியுள்ளார்கள். தற்போதைய விலை குறைப்பை வரவேற்கிறோம். வரும் 27ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 4 கட்சி தலைவர்களும் பங்கேற்போம்.

திருமாவளவன்: வருகிற 25 முதல் 31ம் தேதி வரை கிராமம்தோறும், வீடுதோறும் துண்டு அறிக்கைகள் மூலம் இடது சாரிகளோடு விசிக இணைந்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். மோடி அரசு பொருளாதார சரிவு மற்றும் சமூக பிளவிற்கு காரணமாக இருக்கிறது. மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்த வேண்டும். மே 25 முதல் துண்டு அறிக்கை கொடுக்க தொடங்கி விடுவோம்.

Related Stories: