×

குறுவை சாகுபடி ஆயத்தப்பணிக்காக 3675 டன் விதைகள், 56,229 டன் ரசாயன உரம் இருப்பில் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: குறுவை சாகுபடிக்கான ஆயத்தநிலை தொடர்பாக துறை அலுவலர்கள் உடனான சிறப்பு ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மழைப்பயிர்கள் துறை இயக்குநர், டெல்டா மாவட்ட  வேளாண்மை இணை இயக்குநர்கள், தோட்டக்கலை துணை இயக்குநர்கள், வேளாண்  பொறியியல் துறை செயற்பொறியாளர்கள், விதைச்சான்று மற்றும் விதை ஆய்வு துறை  அலுவலர்கள் கலந்து கொண்டனர். குறுவை சாகுபடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை  அமைச்சர் ஆய்வு செய்தார். கூட்டத்தில், அதிகாரிகள் மத்தியில் காணொளி காட்சி மூலம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:
 
தமிழ்நாட்டில் விவசாயிகள் நடப்பாண்டில் குறுவை சாகுபடி மேற்கொள்ள தயாரான நிலையில், எதிர்பாராத வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி வருவதால், குறுவை விவசாய பணிகளுக்காக மே மாதம் 24ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, குறுவை விவசாயத்தில் நெல் மற்றும் பிற பயிர்களை பயிரிட விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்து குறுவைத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். 46 ஆண்டுகளுக்குப் பிறகு 4.9 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வரலாற்று சாதனை அடையப் பெற்றது. அதைப் போலவே இந்த ஆண்டும் அதிக அளவில் பயிர் சாகுபடி செய்திட விவசாயிகளை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் ஜூன் 12ம் தேதிக்கு முன்கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் பாசனத்திற்காக  திறக்கப்படுகிறது. எனவே டெல்டா மாவட்டங்களில் நெல் நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நல்ல முளைப்புத் திறன் உள்ள நெல் விதைகளை இருப்பு வைக்க வேண்டும். விதை ஆய்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
 
வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படும் வாய்க்கால் பணிகளை துரிதப்படுத்தி கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதை உறுதிபடுத்திட வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இயந்திரங்களான டிராக்டர், பவர் டில்லர், நிலச்சமன்படுத்தும் கருவி மற்றும் நடவு இயந்திரங்களை விவசாயிகள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் வைத்திருந்து தட்டுப்பாடின்றி வாடகைக்கு அளிப்பதுடன் பிற மாவட்டங்களிலிருந்தும் வரவழைத்து வழங்கிட வேண்டும்.

வட்டார அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து மண்ணாய்வு அடிப்படையில் உரமிடுதலை ஊக்குவிக்க வேண்டும். மேலும், உழவர் சந்தைகளை சுற்றி உள்ள கிராமங்களில் காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்க வேண்டும். நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான குறுகிய கால நெல் சன்ன ரகங்களான கோ 51, எடிடீ 45, எடிடீ 43, போன்றவற்றின் விதைகளை தேவையான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தனியார் கடைகளிலும் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

வேளாண்மைத் துறை மூலம் டெல்டா மாவட்டங்களில் 1,609 மெ.டன் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 539 மெ.டன் விற்பனை செய்து 1,111 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தனியார் கடைகள் மூலம் 1,955 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டு 2,564 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அவற்றின் முளைப்புத் திறனை விதைச்சான்றளிப்பு துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறுவை பருவத்திற்கு தேவையான யூரியா, டிஏபி போன்ற உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் போதிய அளவு இருப்பு வைத்து அவற்றின் விற்பனையையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

குறுவை பருவத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 66,000 ஏக்கர் மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்குவித்து உரிய விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான விதைகள் மற்றும் இதர வேளாண் இடுபொருட்களை விநியோகம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில் குறுவை சாகுபடி ஆயத்தப்பணிக்காக 3675 மெ.டன் குறுகிய கால ரக விதைகளும், 56229 மெ.டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Minister ,MRK Panneerselvam , 3675 tonnes of seeds and 56,229 tonnes of chemical fertilizers are in stock for the cultivation of curry: Minister MRK Panneerselvam
× RELATED 400இடங்களில் பாஜக வெற்றி என்பதில்...