×

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இழுபறியில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேரும் அடங்குவார்கள். இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது, திமுகவை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
 
இதேபோன்று, மேலும் 14 மாநிலங்களை சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே, மொத்தம் உள்ள 57 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
 
இந்தத் தேர்தலை நடத்தும் அதிகாரியாக, தமிழ்நாடு சட்டசபை செயலாளர் சீனிவாசனையும், உதவித் தேர்தல் அதிகாரியாக, சட்டசபை துணை செயலாளர் ரமேஷையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. எனவே, வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அறையில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
 
பொது விடுமுறை நாளான 28ம் தேதி மற்றும் 29ம்தேதி ஆகிய 2 நாட்களை தவிர்த்து, வரும் 31ம்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை ஜூன் 1ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3ம் தேதி ஆகும். காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், இந்தத் தேர்தலில் போட்டி இருக்காது.
 
கூடுதலாக மனுத்தாக்கல் செய்யப்பட்டால், ஜூன் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அதிமுகவின் பலம் குறைந்து, திமுகவின் பலம் அதிகரித்துள்ளது. எனவே, தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில், அதிமுகவிடம் உள்ள 3 இடங்களில் ஒன்று திமுகவின் வசம் செல்கிறது.
 
இதனால், திமுகவுக்கு 4 இடங்கள் கிடைக்கும். இந்நிலையில், திமுக தன்னிடம் உள்ள 4 இடங்களில் ஒன்றை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த 15ம் தேதியே திமுக அறிவித்தது.  அதன்படி, திமுக வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
அதிமுகவை பொறுத்தவரை, 3 இடங்கள் 2ஆக குறைந்துள்ள நிலையில், அதை கைப்பற்றும் முயற்சியில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவருக்கும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஒருவருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
 
ஆனால், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பா.வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, இன்பதுரை உள்பட பலரும் வாய்ப்பு கேட்பதால், அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட யாருக்கு சீட் வழங்குவது என்பதில் இழுபறி நீடிக்கிறது. இருப்பினும், இன்று அதிமுக வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

Tags : Tamil Nadu , Election for the post of Member of 6 State Councils in Tamil Nadu: Nomination filing starts tomorrow
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...