மாதனூர்- உள்ளி இடையே பாலாற்றில் ஆபத்தான பைப் பயணத்தில் கிராம மக்கள்

ஆம்பூர் : ஆம்பூர் அடுத்த மாதனூர் மற்றும் உள்ளி இடையே பாலாற்றில் ஆபத்தான நிலையில் கிராம மக்கள் கடந்து செல்கின்றனர். மாதனூர் அருகே பாலாற்றில் இருந்த குடியாத்தம் செல்லும் சாலையில் தற்காலிக பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், மாதனூர் குடியாத்தம் இடையே போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

இதனால், மேல்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியினர் மாதனூர் தேசிய நெடுஞ்சாலையை அடைய முடியவில்லை. இதனால் சுமார் 30 கிமீ சுற்றி தங்களது கிராமத்திற்கு அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமத்தினர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாதனூரில் நடந்த சந்தைக்கு அப்பகுதியினர் தங்களது பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்ய இயலாமல் தவித்தனர்.

கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள், ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள், மருத்துவமனை, பிடிஓ அலுவலகம், வங்கி, மின் வாரிய அலுவலகம் ஆகியவற்றிற்கு செல்வோர் அப்பகுதியில் உள்ள பாலாற்று நீரில் இறங்கியும், அருகில் உள்ள காவிரி குடிநீர் ராட்சத பைப்லைனில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கடந்து வருகின்றனர்.எனவே, பைப் மீது நடக்கும் நிலையில் தவறி நீரில் விழுந்து உயிர்சேதம் ஏற்படும் முன்னர் சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: