கர்நாடகாவில் அணையின் சுவற்றில் ஏற முயன்று 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஸ்ரீனிவாச சாகர் நீர்தேக்கத்தின் சுவர் மீது ஏற முயன்ற இளைஞர் 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள ஸ்ரீனிவாச சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் அணையின் மீதுள்ள சுவரின் மீது ஏற முயன்றுள்ளார். சுவரின் பாதி உயரம் ஏறிய இளைஞர், மேற்கொண்டு செல்ல முடியாமல் அங்கேயே நின்றுள்ளார்.

பின்பு கீழே இறங்க வழிதேடிய இளைஞருக்கு எந்த பிடிமானமும் இல்லாததால், வெகுநேரம் அவ்விடத்திலேயே தொங்கியுள்ளார். இதனால் பதற்றமடைந்த அவர், ஒருகட்டத்தில் கைவலி தாளாமல் கீழே விழுந்துள்ளார். இதில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்பு, அங்கிருந்த சக சுற்றுலா பயணிகள் காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சாகர் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

Related Stories: