×

சிவகாசி பகுதிகளில் பயன்பாட்டில் பாலிதீன்: தடை இருந்தும் தாராளம்-உணவுத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?

சிவகாசி : சிவகாசி பகுதிகளில் ஆபத்து அபாயம் தெரியாமல் டீ, காபிகள் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளில் கொடுக்கப்பட்டு வருவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தமிழக முதல்வரின் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை ஊக்குவிக்க உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாலிதீன் பைகளின் பயன்பாடு என்பது மக்களுக்கு எளிமையான வாழ்க்கை முறை என்ற முறைக்கு பயன்படுவதால் பொதுமக்கள் மத்தியில் இதன் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. சிவகாசி பகுதியில் 5 ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும் அதனை எடுத்து செல்ல இலவசமாக ஒரு பாலிதீன் பை. எண்ணெய், தண்ணீர், பாலில் துவங்கி சட்னி, சாம்பார், டீ, காபி வரை எல்லாமே பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு வருகிறது. சிவகாசி, திருத்தங்கல் நகர் பகுதியில் அதிக பயன்பாட்டில் இருந்த இந்த நாகரீகம் மெல்ல கிராமங்களையும் நெருங்கிவிட்டது.

சிவகாசி நகர் பகுதி, கிராம புறங்களில் பெரும்பாலான ஓட்டல்கள், டீ கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பாலிதீன் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பாலிதீன் பைகள் மற்ற குப்பைகளோடு குவிந்து கிடக்கின்றது. குவிந்து கிடக்கும் பாலிதீன் அபாயம் தெரியாமல் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் பாலிதீன் பைகளை உண்கின்றன.

சமூக ஆர்வலர் ஜெயக்குமார் கூறும்போது, ‘‘பாலிதீன் பைகள் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகாசியில் உணவுத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட வேண்டும். பாலிதீன் பயன்பாட்டினை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், என்றார்.

பாலிதீனுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரம்

பாலிதீன் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பாலிதீன் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ‘‘ஹைட்ரோகார்பன்’’ மற்றும் ‘‘பியூரான்’’, ‘‘கார்சினோஜினிக்’’ போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வயிற்றில் (ஸ்டொமக் கேன்சர்) ஜீன்களை தூண்டிவிடுகிறது. மூளையில் சுரக்கும் சுரப்பியை மட்டுப்படுத்தி ஆண்மைக் குறைவை உண்டாக்குகிறது. இந்த அபாயம் புரியாமல், பலரும் அவசர தேவைகளுக்காக சூடான உணவுப் பொருட்களை நேரடியாக பாலிதீன் கவர்களில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். பாலிதீன் பைக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரம் பற்றி, பலருக்கும் புரிவதே இல்லை.

Tags : Sivagasi , Sivakasi: Authorities in Sivakasi have been distributing tea and coffee in banned polythene bags without knowing the danger.
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...