கிணத்துக்கடவு அருகே நரிக்குறவர் காலனியில் பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தர கோரிக்கை

கிணத்துக்கடவு : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் நல்லட்டிபாலையம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்றாம்பாளையம் பிரிவில் உள்ளது நரிக்குறவர் காலனி. இங்கு சுமார் 40 வீடுகள் உள்ளது இவைகள் 1996 முதல் 2001 வரை நடைபெற்ற திமுக ஆட்சியின் போது 40 காங்கிரீட் வீடுகள் கட்டியதோடு இலவச மின் இணைப்பு கொடுத்து, கிணத்துக்கடவு பகுதியில் குடிசை விடுகளில் வசித்து வந்த நரிக்குறவர்கள் இன மக்களுக்கு வழங்கப்பட்டது. வறுமையில் வாடும் அவர்களால் அரசு கட்டிக்கொடுத்த வீட்டை சரியாக பராமரிக்க முடியவில்லை. அதனால் அந்த வீடுகள் தற்போது பழுதடைந்துள்ளது.

கடந்த பத்து வருடமாக நடைபெற்ற அதிமுக ஆட்சியின் போது பழுதடைந்த வீடுகளை சரிசெய்து தருமாறு அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.

அதனால் அந்த வீடுகள் அனைத்தும் தற்போது முற்றிலும் பழுதடைந்து ஒவ்வொன்றாக இடிந்து வருகிறது.மூன்று வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.சமீபத்தில் கூட முருகன் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. வீடு இடிந்ததற்கு மறுநாள் வந்த அதிகாரிகள், இந்த வீடுகளில் யாரும் வசிக்க வேண்டாம் வெளியே செட் அமைத்து குடியிருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றதோடு சரி அதற்கு பிறகு அந்த பகுதிக்கு வரவேயில்லை.

இந்தநிலையில் கடந்த பத்து நாட்களாக அவ்வப்பொழுது சாரல் மழை பெய்து வருகிறது பலமாக பெய்தால் அனைத்து வீடுகளும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். வரும் ஜூன் மாதத்தில் பருவமழை துவங்குவதற்குள் இடியும் நிலையில் உள்ள இந்த வீடுகளை பழுது பார்க்கவேண்டும் இல்லாவிட்டால் உயிரிழப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்கலைஞர் முதல்வராக இருக்கும்போது தான் வீடுகட்டி கொடுத்தார் கட்டி 25 வருடத்திற்கு மேலானதால் அவை பழுதடைந்துள்ளது. பருவமழை துவங்குவதற்குள் தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்கள் காலணியில் உள்ள வீடுகளை புதுப்பித்து தர உத்தரவிட வேண்டும் என்றனர்.

Related Stories: