×

டப்பிங்கும் நடிப்பும் எனது இரு கண்கள்!

காவல்துறை கதாநாயகி சொல்கிறார்

கதாநாயகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று சினிமாவில் பன்முகங்கள் கொண்டவர் ரவீனா. தமிழ் சினிமாவின் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ஸ்ரீஜா ரவியின் செல்லமகள் இவர். திரைப்படவிழாக்களில் பெரிதும் பேசப்பட்ட படமான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் ஹீரோயின் ஆனவர் ரவீனா.
இப்போது ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்திலும் அட்டகாசமாக நடித்து, ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால் திரையரங்குகள் தடுமாறிக் கொண்டிருந்தாலும், ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நிஜமான மழைக்கு நடுவே பாராட்டு மழையிலும் நனைந்து கொண்டிருந்த ரவீனாவைச் சந்தித்தோம்.

“இப்போ ரிலீஸான ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்துக்கு எப்படி ரெஸ்பான்ஸ்?”

“சூப்பர்னுதான் சொல்லணும். கொரோனா பீதியில் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்களா என்ற கேள்வி இருந்தது. ஆனால் நல்ல படமா இருந்தா வருவாங்க என்கிற பதில் கிடைச்சிருக்கு. கூட்டம் கூட்டமா ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து எங்களை ஆச்சரியப்படுத்தினார்கள். இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்னு சொல்லலாம். ஏனெனில், ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்துக்கு பிறகு நடிப்புக்கு ஒரு வருடம் இடைவெளி எடுத்துக்கொண்டேன். ஏனென்றால் எனக்கு வந்த வாய்ப்புகள் அப்படி ரொம்பவே சுமாரா இருந்தது. எனக்கு ஸ்கோப் இல்லாத படங்களில் நடிக்க விருப்பமில்லை. அந்தச் சமயத்தில் டப்பிங் பணியில் என்னை பிஸியாக ஈடுபடுத்திக் கொண்டேன்.

இதற்கிடையே ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தோட ஒளிப்பதிவாளர் விஷ்ணு, ஹீரோ சுரேஷ் ரவி, இயக்குநர் ஆர்.டி.எம். ஆகியோர் ஹீரோயின் கேரக்டரில் நான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து என்னை அணுகினார்கள். ஸ்டோரி லைன், கதைக்கரு எல்லாமே நன்றாகப் பிடித்திருந்ததால் ஓக்கே சொன்னேன். படப்பிடிப்புக்கு இரண்டு வாரம் முன்பாக ஒர்க்‌ஷாப் நடந்தது. படத்தில் எமோஷனல் காட்சிகள் நிறைய வரும். அதற்கு நிறையப் பயிற்சி தேவைப்பட்டது. நான் நிஜ வாழ்க்கையில் அழுதது மிகவும் குறைவு. சொந்தக்காரர்கள் துக்கத்துக்குகூட அவ்வளவாக அழுதது கிடையாது. படம் பார்த்துவிட்டு அம்மா, ‘உனக்கு எமோஷனலை இப்படியெல்லாம் வெளிப்படுத்த தெரியுமா’ என்று ஆச்சர்யப்பட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்தார்.

படக்குழுவைப் பற்றி சொல்வதாக இருந்தால் எங்க டீம்ல உள்ள யாருமே ஆர்டிஸ்ட், டெக்னீஷியன் என்று பழகவில்லை. எல்லாரும் ஒரு ஃபேமிலி மெம்பர்ஸ் மாதிரிதான் பழகினோம். என்னை ஒரு பெண்ணாகப் பார்க்காமல் ஒரு பையன் மாதிரிதான் பார்த்தார்கள். ஏன்னா, படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன், புரோமோஷன் வேலைகள் என்று எல்லா இடங்களிலும் நான் இருந்தேன். படத்தில் என்னுடைய நடிப்பு பேசப்பட காரணமாக இருந்தவர் இயக்குநர். அவர்தான் எனக்குள் இருந்த திறமைகளை வெளியே கொண்டு வந்தார். கேரக்டருக்கு நியாயம்செய்ய வைத்தார். படத்துக்கு பலதரப்பிலிருந்து பாராட்டு கிடைத்தது. இயக்குநர்கள் வெற்றிமாறன், பாண்டிராஜ், விக்னேஷ் சிவன் என்று தமிழில் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பாராட்டு எனக்கு மிகப் பெரிய எனர்ஜியைக் கொடுத்திருக்கிறது.”

“நெக்ஸ்ட்?”

“வசந்த் ரவி நடிக்கும் ‘ராக்கி’. இதில் நான், பாரதிராஜா, ரோகிணி மேடம் மெயின் லீட் பண்றோம். இப்படத்தில் எனக்கான ஸ்கிரீன் ஸ்பேஸ் குறைவாக இருந்தாலும் ஒருசில இடங்களில் பெயர் கிடைக்குமளவுக்கு அழுத்தமான காட்சிகள் இருக்கிறது. ‘இறுதிச்சுற்று’ ரைட்டர் அருண் மாதேஷ் இயக்கியுள்ளார். அடுத்து, ‘வட்டார வழக்கு’ன்னு ஒரு படம். ‘டூலெட்’ சந்தோஷ் ஹீரோ. மதுரைப் பின்னணியில் நடக்கும் கதை.  பாவாடை, தாவணி என்று லுக் குடும்பப் பாங்காக இருந்தாலும் கொஞ்சம் அடாவடி கேரக்டர்.”

“டப்பிங் சவாலான வேலைன்னு தெரியும். நடிப்பு?”

“அதுவும்தான். இப்போது இருக்கும் இயக்குநர்கள் ரொம்ப ஷார்ப்பாக இருக்கிறார்கள். எந்த வேடமாக இருந்தாலும் ரெபரன்ஸ் கொடுத்து நடிக்க சொல்வதில்லை. நம்முடைய ஸ்டைலில் பண்ணச் சொல்கிறார்கள். அது எங்களுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த உதவியாக இருக்கிறது.”

“ஹோம்லியா நடிச்சா நிறைய வாய்ப்பு கிடைக்காதுன்னு சொல்லுவாங்களே?”

“அப்படியா? எனக்கு நிறைய பட வாய்ப்பு வருகிறது. நான் டப்பிங் பண்ணுவதை விடாமல் பண்ணுவதால் சில சமயம் நடிப்பதில் கவனம் செலுத்தமுடியாமல் போய்விடுகிறது. அந்த வகையில் நான் ‘யெஸ்’ சொன்ன படங்களை விட ‘நோ’ சொன்ன படங்கள் அதிகம். அப்படி நான் செலக்ட் பண்ணி நடிக்கும் படங்களுக்கு விருதுகள் மூலம் அங்கீகாரம் கிடைப்பது என்னுடைய கதைத் தேர்வை நியாயப்படுத்துவது போல் உள்ளது. ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்துக்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன.”

“டப்பிங் கலைஞராக இருப்பதால் நடிப்பு உங்களுக்கு சுலபமாக வருகிறதோ?

“எமோஷனல் ரீதியில் ரெண்டுமே ஒண்ணுதான். ஆனால், நுணுக்கமான வித்தியாசங்கள் நிறைய. டப்பிங் பொறுத்தவரை ஸ்கிரீன், மைக், தனி ரூம் மட்டும் இருக்கும். டயலாக் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தினால் போதும். ஆனால் நடிப்பு அப்படி அல்ல. டயலாக் இல்லாவிட்டாலும் ரியாக்ட் பண்ணணும். சுற்றிலும் நூறு பேர் இருப்பார்கள். எல்லார் முன்பும் நடிக்கணும். முன் ஆயத்தங்கள் அதிகம் தேவைப்படும். பிசிக்கலாக நிறைய சேலஞ்ச் இருக்கும். வெயிலில் நிற்கணும். மழையில் நனையணும். ஆனால் டப்பிங் என்று வரும்போது ஸ்டுடியோவில் ஏசி ஜில்லிப்பில் ஜாலியாக டப்பிங் பேசலாம். அங்கீகாரமும் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. டப்பிங்கை விட ஆக்டிங்கிற்கு அங்கீகாரம் அதிகம்.”

“சின்ன வயசுலேருந்தே சினிமாவில் இருக்கீங்க இல்ல?”

“ஒண்ணே முக்கால் வயசிலிருந்து டப்பிங் பேசி வருகிறேன். எனக்கு சினிமா சலிக்கவே இல்லை. 200 சதவீதம் என்னுடைய வேலை திருப்தியளிக்கும் விதமாக எனக்கே இருக்கிறது. ஆனா, நான் எப்பவுமே சினிமாதான் என் எதிர்காலம் என்றெல்லாம் நினைத்ததில்லை. ஒருமுறை பிளைட்லே டிராவல் பண்ணினேன். உடனே ப்ளைட்ல இருந்த ஏர்ஹோஸ்டஸ் போல் வர விரும்பினேன். எங்களுக்கு ஃபேமிலி டாக்டர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் அட்லாம்  யூசுப். அவர் டாக்டர் என்பதை மறந்து அட்லாம் மாதிரி வரணும்னு சொல்லியிருக்கிறேன். என்னுடைய மாமா ஒருத்தர் ஸ்டீல் பிசினஸில் இருந்தார்.

அவர் மாதத்துக்கு ஒரு ஃபாரீன் ட்ரிப் அடிப்பார். அவரைப் பார்த்ததும் அவர் மாதிரி உலகம் சுற்றும் பிசினஸ் வுமனாக வரணும் என்று நினைத்தேன். ஆனா, அப்பா அம்மா நான் சினிமாவுக்குதான் வருவேன் என்று எதிர்பார்த்தார்கள். அதற்காகவே விஸ்காம் படிக்கச் சொன்னார்கள். இருந்தாலும் ஒரு சேஃப்டிக்காக பிபிஎம். படிச்சேன். பெயரளவில்தான் கல்லூரிக்குப் போனேன். பங்க் அடிச்சிட்டு டப்பிங் பேச வந்துவிடுவேன். சினிமாவை விட்டு நான் விலகுவதும் இல்லை. என்னை விட்டு சினிமா விலகுவதும் இல்லை.''

“உங்க அம்மா கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக சினிமாவில் இருக்காங்களே?”

“ஆமாம் சார். கணக்கு எடுத்துப் பார்த்தா கிட்டத்தட்ட ஐம்பது வருஷத்துக்கு கிட்டே அவங்களுக்கு சர்வீஸ். இன்னும் பிஸியாவே இருக்காங்க. நான் மலையாளத்தில் ஒரு ஹீரோயினுக்கு டப்பிங் பேசினேன். அந்தப் படம் தமிழில் வந்தப்போ அதே ஹீரோயினுக்கு அம்மா டப்பிங் பேசினாங்க. டப்பிங்கைப் பொறுத்தவரைக்கும் எனக்கும் அவங்கதான் போட்டியாளர். எனக்கு முன்னாடி வந்த பல பேருக்கும் அவங்கதான் போட்டியாளர். அம்மாவின் வெற்றி ரகசியமாக நான் பார்ப்பது அவர் பழைய ஸ்டைலை பிடித்துகொண்டிருக்காமல் ‘அப்டேட்’ பண்ணிக்கொண்டே இருப்பார். மனதில் தன்னை எப்போதும் இளமையாகவே ஃபீல் பண்ணுவார். சம்பள விஷயத்தில் கறாராக இல்லாமல் நியாயமான சம்பளத்தை வாங்கிக்கொள்வார். தொழிலா, பணமா என்று வரும்போது தொழிலை விட்டுக்கொடுக்கமாட்டார்.”

“இந்த வருஷம் எப்படி போச்சு?”

“எனக்கு மட்டுமில்லே. உலகத்துக்கே 2020 மோசமான வருஷம் சார். மார்ச் மாதம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படம் ரீலிஸாக வேண்டியது. விநியோகப் பொறுப்பிலிருந்த தயாரிப்பாளர் தனஞ்செயன் சார் அதிக தியேட்டர்களை கமிட் பண்ணி சிறப்பான முறையில் விநியோக ஏற்பாடுகளை செய்திருந்தார். அப்போதுதான் லாக் டவுன் அறிவிப்பு வந்தது. அந்த முடக்கம் பெரியளவில் மன அழுத்தத்தைக் கொடுத்தது. என்னுடைய தயாரிப்பாளர்கள் வணிக ரீதியாக பெரிய  சிரமங்களைச் சந்தித்தார்கள். லாக் டவுன் தளர்வுகளுக்கு பிறகு எல்லா கவலைகளையும் மறக்கடிக்கும் விதமாக வெற்றிமாறன் சார் இந்தப் படத்துக்குள் வந்தார். ஒருவேளை மார்ச் மாதம் இந்தப் படம் திரைக்கு வந்திருந்தால் டைட்டிலில் வெற்றிமாறன் சார் பெயர் இருந்திருக்காது.

வெற்றிமாறன் சார் இந்தப் படத்துக்குள் வந்ததும் படத்துக்கு பெரியளவில் ரீச் கிடைத்தது. ஆடியன்ஸ் மத்தியிலும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியது. படத்தையும் முழுமையாக மக்கள் மத்தியில் சேர்க்க முடிந்தது.  மற்றபடி லாக்டவுன் புண்ணியத்தில் வீடு சுத்தமாச்சு. பல வருடங்களுக்குப் பிறகு முழு குடும்பமாக ஒன்றாக இருந்தோம். நாங்களே சமைத்தோம். டேஸ்ட் நல்லாவே இருந்தது. என் நண்பர்களுடன் கேதர்நாத் ஆன்மிக பயணம் போனேன்.”

“நிஜத்தில் நீங்க எப்படிப்பட்ட கேரக்டர்?”

“நான் கொஞ்சம் சோஷியல் டைப். ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பேன். எளிமை எனக்கு பிடிக்கும். எங்கள் வீட்டுக்கு வந்தால் சிம்பிள் பொருட்களை மட்டுமே பார்க்க முடியும். காஸ்ட்லி பொருள் என்றால் என்னுடைய ஆப்பிள் ஃபோன் மட்டுமே. ஃபியூச்சர்ல பி.எம்.டபிள்யு 7 சீரிஸ் கார் வாங்கணும் என்பது ஆசை.”
 
“கல்யாணம்?”

“அதுக்கு என்ன இப்போது அவசரம். கல்யாண வயதில் ஒரு பொண்ணு இருந்தால் எல்லா  வீட்டிலும் திருமணம் பற்றி பேச்சு அடிபடும். எங்கள் வீட்டிலும் அப்படிப்பட்ட பேச்சு சில சமயம் காதுல வந்து விழும். வீட்ல பேச்சு எடுக்கலைன்னாலும் ரிலேட்டிவ்ஸ்தான் திருமணப் பேச்சை எடுப்பார்கள். தற்போது சினிமாவில் பிஸியாக இருக்கிறேன்.

திருமணம் என்று வரும்போது லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ்தான் என்னுடைய சாய்ஸாக இருக்கும். முன்பின் தெரியாத ஒருவரை வாழ்க்கைத் துணையாக ஏற்பது நடைமுறைக்கு எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. கணவன், மனைவி என்றால் புரிதல் இருக்கணும். வருங்காலக் கணவர் இதே துறையாக இருந்தால் நல்லது.”

“இப்போவெல்லாம் நடிகைகள் அரசியல் பேசி சிக்கலை சந்திக்கிறார்களே?”

“நடிகைகள் அரசியல் பேசுவது நல்ல விஷயம். அது அவர்கள் விருப்பம். இங்கு நடிகைகள் என்பதை கடந்து ஒரு பெண் ஒரு புது விஷயத்தில் இறங்கினால் பல்வேறு விமர்சனங்கள் வருவதை தவிர்க்க முடிவதில்லை. அரசியலில் இறங்கினால் என்ன மாதிரி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று
சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் இல்லை. மற்றபடி சர்ச்சை என்பது எந்த துறையில் இருந்தாலும் வரும். இப்போதுள்ள பெண்கள் போல்டாக இருக்கிறார்கள். சமூகத்துக்காக துணிந்து குரல் கொடுக்கிறார்கள். இந்த துணிச்சல் வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில் அதிகம் இருக்கிறது. இந்த நிலை மாறி எல்லா பெண்களும் அநீதிக்கு எதிராக துணிந்து நிற்க வேண்டும்.”

Tags :
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!