×

காட்பாடி அருகே பொன்னை ஏரியில் இரவோடு இரவாக 20 ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து வேர்க்கடலை விதைப்பு-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

பொன்னை : பொன்னை பொதுப்பணித்துறை ஏரியில் இரவோடு இரவாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வேர்க்கடலை விதைத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பொன்னை பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமாக பெரிய ஏரி 114 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த  ஏரியின் மூலம் சுமார் 300க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிலையில் கடந்த வருடம் பெய்த பலத்த மழையால் ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அனைவரும் விளை நிலங்களில் நெல், கரும்பு, வேர்க்கடலை, கேழ்வரகு உள்ளிட்ட பயிறு வகைகளை விவசாயம் செய்து பயனடைந்தனர்.

இந்நிலையில், தற்போது கோடைக்காலம் என்பதால் ஏரியில் இருந்த தண்ணீர் வற்றிவிட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சில சமூக விரோதிகள் இரவோடு இரவாக ஏரியில் ஜேசிபி மூலம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமித்து, வேர்க்கடலை உள்ளிட்ட பயறு வகைகளை விதைத்துள்ளதாகவும் இப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏரியை ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றப்பட்டுளதால் வரும் பருவமழைக் காலங்களில் மழைநீர் அனைத்தும் வீணாகும். ஏரி நிரம்பாமல் உபரி நீர் அனைத்தும் வெளியேறி விளைநிலங்களை சேதம் அடையும் நிலை உள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கும், பொதுப்பணித் துறையினரும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும் ஊராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்வதில்லை என்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் துறை அதிகாரிகளை வைத்து உடனடி நடவடிக்கை எடுத்து ஏரியில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொன்னை விஏஓ கூறும்போது, பொன்னை ஏரியை சமூகவிரோதிகள் சுமார் 20 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து உள்ளனர். வரும் காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இனி ஆக்கிரமிப்புகள் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

Tags : Ponna Lake ,Kadpadi , Ponnai: The Ponnai Public Works Department has been occupying the lake overnight and sowing peanuts. Officials concerned in this regard
× RELATED பிரிந்து சென்ற கணவன் மீது நடவடிக்கை...