ஆரணி அருகே பரபரப்பு காஸ் சிலிண்டர் வெடித்து ஓட்டு வீடு தரைமட்டம்

* சமையல் செய்த பெண் காயம்

* ₹2 லட்சம் பொருட்கள் கருகின

ஆரணி : ஆரணி அருகே சமையல் செய்தபோது, காஸ் சிலிண்டர் வெடித்து தீ நெசவு தொழிலாளியின் வீடு தரைமட்டமானது. இதில் பெண் காயமடைந்தார். மேலும் ₹2 லட்சம் பொருட்கள் தீயில் கருகியது.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சி, தசராப்பேட்டையை சேர்ந்தவர் பட்டாபி(53), நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி லலிதா(40). இவர் நேற்று வீட்டில் சமையல் செய்வதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். தொடர்ந்து பாத்திரத்தில் தண்ணீர் வைத்துவிட்டு அருகிலுள்ள அறைக்கு சென்றார்.

அப்போது காஸ் சிலண்டரில் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து ஓட்டு வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தது. அதோடு வீட்டில் இருந்த மேலும் 2 சிலிண்டர்களுக்கு தீ பரவியது. அதிர்ஷ்டவசமாக லலிதா பக்கத்து அறையில் இருந்ததால் லேசான காயங்களுடன் தப்பினார்.

சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், லேசான தீக்காயங்களுடன் இருந்த லலிதாவை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர், ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், ஆரணி தீயணைப்பு  நிலை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு எரிந்து கொண்டிருந்த 3 காஸ் சிலிண்டர்களையும் அப்புறப்படுத்தினர். சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், வீட்டில் இருந்த ₹2 லட்சம் மதிப்பு நெசவு சாமான்கள் மற்றும் பொருட்கள் தீயில் கருகி சேதமாகின.

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாசில்தார் பெருமாள் மற்றும் வருவாய்துறையினர் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்திற்கு, அரசு சார்பில் ₹5 ஆயிரம், அரிசி, காய்கறி, பருப்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.காஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தால் அப்பகுதியில் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: