விழுப்புரம் அருகே சொத்துக்காக மகன்களே தந்தையை கொல்ல முயற்சி: கழுத்து அறுபட்ட நிலையில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வாக்குமூலம்

விழுப்புரம்: விழுப்புரம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அகமது, கழுத்து அறுபட்ட நிலையில் சாலையோரம் மீட்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் அகமது. இவர் விழுப்புரம் நகராட்சியில்  2 முறை சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நகர்மன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். மேலும், அப்பகுதியில் நகராட்சி ஒப்பந்தகாரராக பணி செய்து வந்தநிலையில், பல்வேறு தொழில்களையும் மேகொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணிக்கு காயங்களுடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அகமது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காலை 4 மணிக்கு சிகிச்சை முடிந்து, மீண்டும் விழுப்புரம் சென்றார். அப்பொழுது, மர்மகும்பல் ஒன்று, முகமதுவின் காரை வழிமறித்து கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அதனால் பதற்றமடைந்த அவர், அங்கிருந்து தப்பி, விழுப்புரம் நகர் பகுதியை வந்தடைந்தார். ஆனால் அங்கேயும் ஒரு கும்பல் இவரை தாக்க முற்றப்பட்டது. இதனைகண்டு அதிர்ந்த அகமது, உடனடியாக காரில் சென்னையை நோக்கி விரைந்தார். ஆனால், அங்கேயும் விடாது துரத்திய மர்மகும்பல் காரை வழிமறித்து, முகமதுவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றனர். ஆனால் கழுத்து அறுபட்ட நிலையிலும் அங்கிருந்து தப்பிய அகமது, அய்யன்கோயில்பட்டு கிராமத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து அகமதுவிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது சற்றும் எதிர்பாராத வகையில் அகமது வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில், தன் மகன்களே சொத்துப்பிரச்சனைக்காக தன்னை கொலை செய்ய முயன்று கழுத்தை அறுத்ததாக விழுப்புரம் போலீசாரிடம் கூறினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அகமதுவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்தனர். மேலும், சொத்துப்பிரச்சனை காரணமாக பெற்ற தந்தையையே மகன்கள் கொலை செய்ய திட்டமிட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.                          

Related Stories: