குமரி அருகே காரில் கஞ்சா கடத்தல் மும்பை எஸ்ஐ கணவர் சிக்கினார்

தக்கலை: திருவிதாங்கோடு அருகே கஞ்சா கடத்தலில் மும்பை சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் சிக்கினார். குமரி மாவட்டம் தக்கலை அருகே  திருவிதாங்கோடு சந்திப்பில் நேற்று முன்தினம் மாலை போலீசார் நடத்திய வாகன சோதனையில், காரில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காரில் இருந்த குமரி மாவட்டம் திருவிதாங்கோடு கலை செல்வின் (வயது47), மனோஜ் (31) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கலைச்செல்வின், பளுதூக்கும் வீரர். இவர் மும்பையில் ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக இருந்தார். அப்போது அங்கு பெண் சப் இன்ஸ்பெக்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடும்பத்துடன் மும்பையில் தான் வசித்து வருகிறார். மனைவி எஸ்ஐ என்பதால் அங்குள்ள போதை கும்பலுடன் கலைச்செல்வினுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்துக்கு கஞ்சா சப்ளையராக கலைச்செல்வின் மாறி உள்ளார். நண்பரும், ஜிம் பயிற்சியாளருமான மனோஜுடன் சேர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளார். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவுக்கும் கஞ்சா சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.

சொந்த காரையே கடத்தலுக்கு பயன்படுத்தி உள்ளார். மும்பையில் இருந்து கஞ்சாவை மொத்தமாக கொள்முதல் செய்து காரில் கடத்தி வரும் போதே கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். கலைச்செல்வின் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் போர்வையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுடன் பழக்கம் இருந்துள்ளது. அதன் மூலம் எளிதில் இவருக்கு கஞ்சா கிடைத்துள்ளது. பலமுறை இது போன்று காரில் கஞ்சா கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. தேவைப்பட்டால் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: