×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி 4ம் ஆண்டு நினைவு தினத்தில் பொதுமக்கள் அஞ்சலி

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 2018 மே 22, 23ம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனையடுத்து நடந்த தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு நடந்த 4ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி பாத்திமாநகர், லயன்ஸ்டவுன், திரேஸ்புரம், அண்ணாநகர், லூர்தம்மாள்புரம், இனிகோ நகர், மீன்பிடி துறைமுகம், குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் 13 பேரின் படங்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். அவர்களது கல்லறையிலும் அஞ்சலி செலுத்தினர்.

விவிடி சிக்னல் அருகே ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினர் அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிபிஐ குற்றப்பத்திரிகையை கிழித்து எறிந்தனர்:  தூத்துக்குடி மாநகராட்சி பொது மயானத்தில், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் கல்லறையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இறந்தவர்களின் உறவினர்கள், கூட்டமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அவர்கள் அங்கு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு சிபிஐ குற்றப்பத்திரிகை நகலை கிழித்தெறிந்தனர். தொடர்ந்து அவர்கள் பாளை மெயின் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 72பேரை போலீசார் கைது செய்தனர்.


Tags : Tuticorin , Thoothukudi, shooting, killing, memorial day, Public tribute
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...