பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: ஒன்றிய அரசு குறைத்தது போல் மாநில வரியில் குறைந்தபட்சம் பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 9 ரூபாயும் உடனடியாக குறைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க, மத்திய கலால் வரியினை இதுவரை இரண்டு முறை குறைத்துள்ளது. முதல் முறையாக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்தது. மேலும், ஒன்றிய அரசு கலால் வரியினை குறைக்கும்போது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் அந்தந்த மாநில அரசுகளின் மாநில வரியினை குறைக்க கேட்டுக்கொண்டதை அடுத்து இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைத்தன.

தொடர்ந்து, ஒன்றிய அரசு 2ம் முறையாக நேற்று (21ம் தேதி) கலால் வரியினை, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8 ரூபாயும், லிட்டர் டீசலுக்கு 6 ரூபாயும் குறைத்துள்ளது. மேலும், உஜ்வாலா சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் மற்றப் பொருட்களின் விலைகள் குறையும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது.  

பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகுறையும்போது அனைத்துப் பொருட்களின் விலையும் குறையும். இதனால் சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பயனடைவர். எனவே, தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் என்று அனைத்து தரப்பினரின் நலனையும் காக்கும் வகையில் ஒன்றிய அரசு குறைத்தது போல், மாநில வரியில் குறைந்தபட்சம் பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 9 ரூபாயும் உடனடியாக குறைக்க வேண்டும்.இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

Related Stories: