×

பிளஸ் 2 தேர்வு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்கள் ஜூன் 1 முதல் திருத்த வேண்டும்: தேர்வு துறை உத்தரவு

சென்னை: பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஜூன் 1 மற்றும் 9ம் தேதிகளில் தொடங்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. வரும் 28ம் தேதியுடன் முடிகிறது. பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு கடந்த 10ம் தேதி தொடங்கி 31ம் தேதியுடன்  முடிகிறது. இதன் தொடர்ச்சியாக விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்து வருகிறது.

அதனால், பிளஸ் 2 வகுப்பு  தேர்வுகளில் 5, 9, 11 மற்றும் 13ம் தேதிகளில் நடந்த  தேர்வுகளின் விடைத்தாள்கள் கடந்த 14ம் தேதி தொகுக்கப்பட்டு, 15, 16ம் தேதிகளில் விடைத்தாள்களின் முகப்பு பக்கங்கள் நீக்கப்பட்டு டம்மி எண்கள் போடும் பணி நடந்தது. இதையடுத்து 28ம் தேதி இந்த விடைத்தாள்கள் அந்தந்த விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பும் பணி தொடங்க உள்ளது.

விடைத்தாள்கள்  திருத்துவதற்காக தமிழகத்தில் 40 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில் 4 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் சுமார் 20 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஜூன் 1ம் தேதி முதன்மைத் தேர்வர்கள், தனி அதிகாரிகள் பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்துவார்கள். அதைத் தொடர்ந்து ஜூன் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்துவார்கள்.

அதேபோல, பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும் மே 21ம் தேதி அனைத்து தேர்வு மையங்களில் இருந்தும் தொகுக்கப்பட்டு 22, 23ம் தேதிகளில் விடைத்தாள் முகப்பு பக்கங்கள் நீக்கப்பட்டு டம்மி எண்கள் போடப்படுகிறது. இதையடுத்து, ஜூன் மாதம் 4ம் தேதி விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக ஜூன் 9ம் தேதி முதன்மைத் தேர்வர்கள், தனி அதிகாரிகள் விடைத்தாள்களை திருத்துவார்கள். பின்னர் ஜூன் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள்களை  திருத்துவார்கள். இதில் அரியர் தேர்வு எழுதியோரின் விடைத்தாள்கள் 11ம் தேதியுடன் திருத்தி முடிக்கப்பட வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


Tags : Plus 2 Exam General Examination, Question Papers, Exam Department Order`
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்