×

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் 4,848 செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் 4,848 செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று  சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் குத்துச்சண்டை வீரர் பாலாஜி, தீ சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சூர்யகுமார் மற்றும் தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி சிந்து ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர், இது குறித்து நிருபர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி  தெரிவித்ததாவது: மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் தேசிய நலவாழ்வு குழுமத்தில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி கொண்டிருக்கின்றனர் அவர்கள் ஊதிய உயர்வுக்காக முதலமைச்சரையும், என்னையும் சந்தித்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 28,982 பேருக்கு 30 சதவீதம் ஊதிய சலுகைகள் அளித்து ஆணைகள் அளித்திருக்கிறோம். அதற்கு 89 கோடியே 82 லட்சம் நிதி செலவினம் கூடுதலாக ஆகியிருக்கிறது. மீதம் இருக்கிற 5971 மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் எங்களுக்கும் 30% சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி,கடந்த ஏப்ரல் முதல் 32 கோடியே 78 லட்சம் செலவில் அந்த சம்பள உயர்வு வழங்கப்பட இருக்கிறது. இன்னும் ஒரு பத்து நாட்கள் கழித்து ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அந்த நிகழ்ச்சியில் ஆணைகள் வழங்கப்பட இருக்கிறது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 4,848 செவிலியர்கள் ரூபாய் 14,000 ஊதியத்தில் பணியாற்றுவதற்கு அமர்த்தப்பட்டார்கள். இத்திட்டத்தின் கீழ் அவர்களுடைய பணியை மிகச்சிறப்பாக செய்துகொண்டிருக்கின்றனர் அவர்களும் சம்பள உயர்வு குறித்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஜனவரி மாதம் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டாலும் அவர்களுடைய பணி என்பது மகத்தான பணியாக இருந்து வருகிறது. அவர்களுடைய ஊதியம் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதுவும் கூட ஏப்ரல் மாதத்திலிருந்து கணக்கிட்டு அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

அதேபோல் 2448 பேருக்கு  மாதம் 11 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தில் நிதியின் கீழ் கடந்த ஜனவரி முதல் பணியில் அமர்த்தப்பட்டார்கள். இவர்களும் எங்களுக்கும் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் இவர்களுக்கும் 3 ஆயிரம் ஊதியம் உயர்த்தப்பட்டு 14 ஆயிரமாக ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிட்டு அவர்களுக்கு வழங்கப்படும்.  ஏற்கனவே தேசிய நலவாழ்வு குழுமத்தில் 5,971  30% ஊதிய உயர்வும், 4,848 செவிலியர்களுக்கு நான்காயிரம் ஊதிய உயர்வும், 2,448 ஹெல்த்கேர் ப்ரொவைடர் ரூபாய் 3 ஆயிரம் ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை உங்கள் மூலம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்  முதல்வர் மு.க ஸ்டாலின்   உத்தரவின்படி 13,267 பேருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தரும்.

தேசிய நல்வாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்ற மகளிர் எங்களுக்கு மகப்பேறு விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் எங்கேயும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்ற மகளிர் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு என்பது இல்லை எனவே அவர்களுக்கு  ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மருத்துவத் துறையின் கட்டமைப்பை மருத்துவத்துறையின் மானிய கோரிக்கையில் மேம்படுத்துவதற்கு 136 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது என்றாலும், தினந்தோறும் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Minister ,Ma. Subramanian , In search of people medicine, nurses, pay rise, Minister Ma. Subramanian
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...