×

பாஜ.வுக்கு எதிராக 3வது அணி அமைக்க தீவிர முயற்சி ஜனாதிபதி பதவிக்கு குறி: தேசிய பயணத்தில் சந்திரசேகர ராவ் தலைவர்களுடன் அடுத்தடுத்து சந்திப்பு

சண்டிகர்: பாஜ, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அடுத்து நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அவர் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஒருவார கால பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார். தேசிய அரசியலில் பாஜ, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள் பலமுறை நடந்தாலும் இதுவரை பெரிய அளவில் வெற்றி கண்டதில்லை. இந்நிலையில், தற்போது மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் ஒருவார கால தேசிய சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.

முதல் கட்டமாக டெல்லி சென்ற அவர், அங்கு நேற்று முன்தினம் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் தேசிய அரசியல் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அவருடன் பல்வேறு விவகாரங்களை விவாதித்த சந்திரசேகர ராவ், டெல்லி அரசுப் பள்ளி, மொகில்லா கிளீனிக்களை பார்வையிட்டனர்.

பின்னர் நேற்று கெஜ்ரிவால் தனது வீட்டில் சந்திரசேகர ராவுக்கு மதிய விருந்து அளித்தார். அங்கிருந்து இரு தலைவர்களும், பஞ்சாப் மாநிலம் சண்டிருக்கு சென்றனர். அங்கு பஞ்சாப்பின் புதிய முதல்வரான ஆம் ஆத்மியின் பகவந்த் மன் சிங்கை சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். பின்னர், வேளாண் சட்டத்தை எதிர்த்து நடந்த நாடு தழுவிய போராட்டத்தில் பலியான சுமார் 700 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார். பஞ்சாப்பைத் தொடர்ந்து அவர் வரும் 26ம் தேதி பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்திக்க உள்ளார். பின்னர், வரும் 28ம் தேதி கொல்கத்தா சென்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும், அடுத்ததாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சி தலைவரான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ்வையும் சந்திக்க உள்ளார். அதோடு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் சந்திரசேகர ராவ் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இப்பயணம் குறித்து சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘2024 மக்களவை தேர்தலை குறிவைத்து பாஜ, காங்கிரஸ் அல்லாத 3வது அணி அமைக்க தீவிர முயற்சி செய்கிறோம். இதற்காக பல்வேறு கட்சித் தலைவர்களின் ஆதரவை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திரட்டி வருகிறார். அதோடு, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பாஜவை எதிர்த்து பொது வேட்பாளரை களமிறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காகவே கெஜ்ரிவால், மம்தா, நிதிஷ்குமார், நவீன் பட்நாயக் ஆகியோரின் ஆதரவை சந்திரசேகர ராவ் திரட்டி வருகிறார். எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் வருவது குறித்து ஆட்சேபனை இல்லை. ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் நிறுத்தும் பொது வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு தர விரும்பினால் அதை ஏற்போம்,’ என்றனர்.

* முயற்சி பலிக்குமா?
தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. எனவே, அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டி உள்ளது. கடந்த 2017ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜ சார்பில் ராம்நாத் கோவிந்த் களமிறக்கப்பட்ட போது, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமார் நிறுத்தப்பட்டார். ஆனால் மீராகுமார் தோல்வி அடைந்தார். ஜனாதிபதி தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். இதனால், தற்போது 15 மாநிலங்களில் பாஜ ஆட்சி நிலவும் நிலையில், அக்கட்சி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் வெற்றி பெறுவாரா என்பது கேள்விக்குறி என்பதால் சந்திரசேகர ராவின் இந்த முயற்சி பலிக்குமா என்பது சந்தேகமே. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதிஷ் குமார், நவீன் பட்நாயக் ஆதரவு அளித்து வந்தாலும், சில விஷயங்களில் நிதிஷ் குமார் அதிருப்தியில் உள்ளார். எனவே, முக்கிய தலைவர்களான இவர்களை வளைக்கவும் சந்திரசேகர ராவ் காய் நகர்த்தி வருகிறார்.

Tags : BJP ,Chandrasekara ,Rao , Intense attempt to form 3rd team against BJP marks the presidency: Subsequent meetings with Chandrasekara Rao leaders on national tour
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு