×

பொதுத்துறை நிறுவனத்துக்கு தராமல் ரயில் சக்கரம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துக்கு வழங்கிய ஒன்றிய அரசு

சென்னை: ரயில் சக்கரம் தயாரிப்பதற்கு பொதுத்துறை நிறுவனம் இருந்தும், சீன நிறுவனத்துக்கு 39,000 ரயில் சக்கரங்கள் வாங்குவதற்கு ஒன்றிய அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்களுக்கான சக்கரங்கள் தயாரிப்பதற்காக ரயில்வே அமைச்சகம் சார்பில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், டெய்சாங் ஹாங்காங் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: வந்தேபாரத் ரயில்களுக்கு சக்கரங்கள் தயாரிக்க வேண்டியுள்ளது.

ஆனால்,  உக்ரைன் போர் காரணமாக, தேவையான அளவுக்கு ரயில் சக்கரங்கள் இறக்குமதி செய்ய இயலவில்லை. இதனால்தான் இந்த டெண்டர் விடுக்கப்பட்டது. ரூ.170 கோடி மதிப்பிலான இந்த டெண்டரின்படி, 39,000 சக்கரங்களை சீன நிறுவனம் தயாரித்து வழங்கும். இவ்வாறு அவர் கூறினார். வைசாக் ஸ்டீல் என அழைக்கப்படும் ராஷ்டிரீய இஸ்பத் நிகாம் லிமிடெட் நிறுவனம், விசாகபட்டினத்தில் உள்ளது. நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனம் இது. இந்த நிறுவனம் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் ரயில் சக்கரங்களை தயாரிக்க முடியும்.

ஆனாலும், உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு தகுதியான பொதுத்துறை நிறுவனமான வைசாக் ஸ்டீலுக்கு தராமல், சீன நிறுவனத்துக்கு சக்கரம் தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது, தற்சார்பு பற்றியும், உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக வலியுறுத்தி வரும் ஒன்றிய அரசின் இந்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் பணியில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பெட்ரோலிய துறை, காப்பீட்டு துறை உட்பட லாபத்தில்  இயங்கும் நிறுவனங்கள் கூட தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் எல்ஐசி நிறுவன பங்குகள் விற்பனைக்கு விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* அப்போது தடை இப்போது தாராளம்
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்றிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, எல்லை நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதையும், அங்கிருந்து பொருட்கள் சப்ளை செய்வதையும் தடை செய்துள்ளதாக தெரிவித்தது. அப்படியிருக்க, இந்திய வீரர்களை கொன்று குவித்த சீன நாட்டின் நிறுவனத்துக்குதான், மேற்கண்ட ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

* வைசாக் ஸ்டீலும் தாரை வார்க்கப்படுமா?
வைசாக் ஸ்டீல் எனப்படும் ராஷ்டிரீய இஸ்பாட் நிகாம் லிமிடெட் நிறுவனத்தை தனியார் மயமாக்க, கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசாகபட்டினத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. மேலும், இந்த நிறுவன பங்குகள் முழுவதும் ஒன்றிய அரசிடம்தான் உள்ளது. மாநில அரசுக்கு பங்கு இல்லை. எனவே, இதில் நூறு சதவீத முதலீடுகளையும் விலக்கிக் கொள்ள ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது என, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

* ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள வைசாக் ஸ்டீல் நிறுவனம், ஆண்டுக்கு 7.3 மில்லியன் டன் கையாளும் திறன் கொண்டது.
* 1982ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 10 ஆண்டுகள் கழித்து, 3 மில்லியன் டன் திறன் கொண்டதாக செயல்பட துவங்கியது. பின்னர் 2015 ஏப்ரலில் 6.3 மில்லியன் டன்களாகவும், 2017 டிசம்பரில் 7.3 மில்லியன் டன்களாகவும் திறன் உயர்த்தப்பட்டது.
* கொரோனா பரவலின்போது, இந்த ஆலையில் இருந்துதான் 100 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் நாடு முழுவதும் சப்ளை செய்யப்பட்டது. கொரோனாவில் பலரின் உயிர்களை காக்க உதவிய இந்த ஆலைக்கு வர வேண்டிய டெண்டர்தான், சீனாவுக்கு கைமாறியுள்ளது.

Tags : U.S. government , The U.S. government awarded a contract to a Chinese company to manufacture a rail wheel without awarding it to a public company
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...