×

12 நாடுகளில் 92 பேருக்கு பாதிப்பு குரங்கு அம்மை மேலும் பரவும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன்: குரங்கு அம்மை தொற்றால் 12 நாடுகளில் 92 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்த வைரஸ் மேலும் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. சின்னம்மை போல குரங்கு அம்மை வைரஸ் மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பொதுவாக கோடை காலங்களில் பரவும் நோய் தொற்றாகும். ஆனால், தற்போது குரங்கு அம்மை முதல் முறையாக ஆப்ரிக்க நாடுகளைத் தாண்டி பல்வேறு நாடுகளுக்கு பரவத் தொடங்கி இருக்கிறது. இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டுமின்றி ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவிலும் பரவி உள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதுவரை குரங்கு அம்மை நோய் தொற்று 12 நாடுகளில் 92 பேருக்கு தொற்றி உள்ளது. மேலும், சில நாடுகளில் 50 பேருக்கு பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இன்னும் பலருக்கு தொற்ற வாய்ப்புள்ளது. எனவே, பாதிப்பு ஏற்பட்ட நாடுகளுடன் இணைந்து பிற நாடுகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,’ என எச்சரித்துள்ளது.

* தடுப்பூசி இல்லை
பொதுவாக ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படும் குரங்கு அம்மை, தற்போது உலகம் முழுவதும் பரவக் காரணம், அது உருவமாறி புதிய வகை வைரஸ் தோன்றி இருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த வைரசுக்கு என தனியாக தடுப்பூசி எதுவும் இல்லை. பெரியம்மைக்கான தடுப்பூசியே குரங்கு அம்மைக்கு எதிராக 85 சதவீதம் பாதுகாப்பு தருவதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

* பைடன் அச்சம்
தென் கொரியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கு ஓசன் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ‘குரங்கு அம்மை வேகமாக பரவக்கூடியது என்பதால் அது கவலை தரும் ஒன்றாக உள்ளது. இதனால், அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த வைரசுக்கு எதிரான வலுவான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடக்கின்றன,’ என்றார்.

Tags : Outbreak of monkeypox ,World Health Organization , Outbreak of monkeypox in 92 countries out of 12: World Health Organization warns
× RELATED இந்தியாவில் 20 கோடி மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்