சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை (98.6 பாரன்ஹீட்) ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இதற்கிடையில் புயல் காரணமாக ஆங்காங்கு லேசானது முதல் கனமழை வரை பெய்தது. இதனால் வெப்பம் சற்று குறைந்தது. இந்நிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பகல் நேரங்களில் வாகனங்களை இயக்கும் போது கண் எரிச்சல் ஏற்படுவதால், பலரும் வெளியில் வருவதற்கே தயக்கம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள ஆங்காங்குள்ள ஜூஸ், இளநீர் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

மேலும் வீடுகளில் குளிர்சாதனப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் சென்னையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று முதல் வரும் 25ம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய ேலசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

இன்றும், நாளையும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். வடக்கு கேரளா-தெற்கு கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

அதனை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50  கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மேலும் 25ம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: