×

செம்பனார்கோயில் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி; கலெக்டர் லலிதா ஆய்வு

செம்பனார்கோயில்: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டத்தில் நீர்வளத் துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகள் மற்றும் நீடித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் வீரசோழனாறு, மஞ்சளாறு ஆகிய ஆறுகளில் மறுசீரமைப்பு பணி மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர் பகுதியில் ரூ.24 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியையும், ரூ.24 லட்சம் செலவில் கழனிவாசல் வாடகுடி வாய்க்கால் தூர்வாரும் பணியையும், ரூ.5.50 லட்சம் செலவில் திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்கால் தூர்வாரும் பணியையும், ரூ.2.50 லட்சம் செலவில் அனந்தமங்கலம் கண்ணப்பன்மூலை வாய்க்கால் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து நீடித்தல் புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் நடைபெற்று வரும் மேமாத்தூர் ஹரிஜன் கடைமடை மதகு அமைக்கும் பணியையும், ரூ. 75 லட்சம் செலவில் மாத்தூர் கடுவேலி கிராமத்தில் கீழ்குமுழி அமைக்கும் பணியையும், ரூ.40 லட்சம் செலவில் சிந்தாமணி மஞ்சள்வாய்க்கால் கடைமடை நீரொழுங்கி அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பதற்குள் பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது நீர்வளத் துறை செயற்பொறியாளர் சண்முகம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் கண்ணப்பன், பாண்டியன், உதவி பொறியாளர்கள் வீரப்பன், விஜயபாஸ்கர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Sembanarkoil , Dredging work in the Sembanarkoil area; Collector Lalita study
× RELATED செம்பனார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்