அரியலூர் அருகே புதுக்கோட்டையில்; ஜல்லிக்கட்டு: 668 காளைகள் சீறிப்பாய்ந்தன: 32 பேர் காயம்

அரியலூர்: திருமானூர் அருகே நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 668 காளைகள் பங்கேற்றன. 32 பேர் காயமடைந்தனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் அரியலூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 668 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 340 பேர் 6 குழுக்களாக அனுமதிக்கப்பட்டனர்.வாடிவாசலிலிருந்து சீறி வந்த காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், ஜல்லிக்கட்டை காண வந்த பார்வையாளர்கள் என 32 பேர் காயமடைந்தனர். இதில், படுகாயமடைந்த சேலம் மாவட்டம் தடாவூர் ராஜா மகன் சண்முகம்(21), புள்ளம்பாடி மணிராஜ் மகன் மகேஷ்(32), புதுக்கோட்டை செல்லையா மகன் அடைக்கலம்(40), சுந்தரம் மகன் ராஜா(25) உட்பட 7 பேர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழு சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: