×

மேலூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா

மேலூர்: மேலூர் அருகே செமினிபட்டியில் ஆண்டிபாலகர், உச்சிமாகாளியம்மன் கோயில் அருகில் உள்ளது கரும்பாச்சி கண்மாய். நெல் அறுவடைக்கு பிறகு கண்மாயில் உள்ள நீரில் ஏற்கனவே விட்டு வளர்க்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் பிடிக்கும் மீன்பிடி விழா இங்கு ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். நேற்று கிராம பெரியவர்கள் துண்டு வீச, கண்மாயை சுற்றி நின்ற ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஒரு சேர கண்மாயில் இறங்கினர். தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடிக்க ஆரம்பித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை போன்ற மீன்கள் சிறியது முதல் பெரியது வரை பிடிபட்டது.

அதே நேரத்தில் மீன்களுக்கு சமமாக வலைகளில் பாம்புகளும் சிக்கியதால், பொதுமக்கள் அவற்றை பிடித்து வெளியில் விட்டனர். தொடர்ந்து சாதி மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இணைந்து கண்மாயில் மீன்களை பிடித்து, அவற்றை வீட்டிற்கு சென்று இறைவனுக்கு படைத்து உண்டனர். பிடித்த மீன்களை விற்பனை செய்ய கூடாது என்ற ஐதீகம் காரணமாக, நேற்று அவ்வூரில் உள்ள அனைத்து வீடுகளிலும் மீன் குழம்பு வாசனை தூக்கியது. இப்படி பாரம்பரிய முறைப்படி மீன்களை பிடித்து இறைவனுக்கு படைத்தால், மழை பெய்து, விவசாயம் அடுத்த வருடம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.



Tags : Kanmayil Fishing Festival ,Melur , Kanmayil Fishing Festival near Melur
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!