×

சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்

சென்னை: சென்னையில் வருகிற 28ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது. இதில் பாமக தலைவராக அன்புமணி நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பாமக  கட்சி் தலைவராக ஜி.கே.மணி கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.  

இந்நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்சித் தலைவராக அன்புமணியை கொண்டுவர பாமகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு சிறப்பு பொதுக்குழுவில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்கும் பட்சத்தில், ஜி.கே.மணிக்கு வேறு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது, ஆலோசகர் பதவி வழங்கப்படலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்வைத்தே அன்புமணிக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்கப்படவே இந்த சிறப்பு பொதுக்குழு கூடுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகிற 24ம் தேதி ஜி.கே.மணி தலைவராக பதவி ஏற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னையில் பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது.

* எனக்கு பதவி ஆசை கிடையாது - அன்புமணி
பாமக செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு திம்மாவரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். அன்புமணி பேசுகையில், ‘‘நாம் கட்சி தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது.‌ ஆனால் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும். இந்த பொதுக்குழு கூட்டம் கூட்டியது நான் முதல்வராக வரவேண்டும் என்று இல்லை. பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதால்தான்’’ என்றார். பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மாநில வன்னியர் சங்க செயலாளர்  திருக்கச்சூர் ஆறுமுகம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Anbumani ,Special General Committee ,Chennai ,GK , Anbumani to be elected as the Chairman of Special General Committee Pamaka on 28th in Chennai? Plan to give GK another post
× RELATED ஹோலி பண்டிகை கட்சித்தலைவர்கள் வாழ்த்து