×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை: தஞ்சையில் மட்டும் 100 டிகிரி; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தமிழகத்தில் நேற்று தஞ்சையில் மட்டும் 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது. மற்ற மாவட்டங்களில் 100க்கு கீழ்தான் பதிவாகி இருந்தது. எனினும் அனல் காற்று வாட்டி எடுத்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23ம் தேதி(நாளை) முதல் 25ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு(இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.இன்று வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு கேரளா-தெற்கு கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதே போல வருகிற 24,25ம் தேதி வரை காற்று வீசக்கூடும்.

Tags : Tamil Nadu ,Tanjore , Atmospheric overcast, moderate rainfall for the first 4 days in Tamil Nadu due to convection: 100 degrees in Tanjore only; Meteorological Center Information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...