‘உன் பெயர் முகமது தானே...’ மனநிலை பாதித்தவரை தாக்கிய பாஜ நிர்வாகி: சடலமாக கிடந்ததால் பரபரப்பு

நீமுச்: மனநிலை பாதித்தவரை பாஜ பிரமுகர் கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டம், சார்சி கிராமத்தை சேர்ந்தவர் பவர்லால் ஜெயின். மனநிலை பாதித்தவர். கடந்த 15ம் தேதி ராஜஸ்தானில் உள்ள சித்தோர்கார் என்ற இடத்தில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்ற பவர்லால்  வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ராம்புரா ரோடு பகுதியில் பவர்லால் ஜெயினின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்த பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர்தான் ஒருவர் பவர்லால் ஜெயினிடம், ‘உன் பெயர் என்ன? முகமது தானே. உன்னுடைய ஆதார் அட்டையை காட்டு,’ என்று கூறி முதியவரை கன்னத்தில் திரும்ப திரும்ப அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவர்லாலின் குடும்பத்தினர் உடனே காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த வீடியோ காட்சிகள் பரபரப்பானதையடுத்து மானசா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முதியவரை அடித்த நபரை குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் மானசாவை சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்பது தெரிந்தது. காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் பாஜவை சேர்ந்தவர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories: