×

மலை காய்கறி விவசாயத்தை ஊக்குவிக்க விளைபொருட்களை சேமித்து வைக்க பதப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்படும்: ஊட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஊட்டி: மலை காய்கறி விவசாயத்தை ஊக்குவிக்கவும்,  விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்  விளைபொருட்களை சேமித்து வைக்க  பதப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் நடந்த விழாவில் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி மாலை ஊட்டிக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று அங்கு போர் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.

ரூ.34.30 கோடி மதிப்பில் 20 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.56.36 கோடி மதிப்பில் 28 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.28.13 கோடி மதிப்பில் 9,500 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: யுனெஸ்கோ நிறுவனம் நீலகிரியை உயிர்கோள பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திருக்கிறது. இதற்கு எனது பாராட்டுக்கள். இந்த அரசு இயற்கை, மனிதன் இணைந்து வாழும் வகையில் பல திட்டங்களை செய்து வருகிறது. தற்போது, உள்ள 20 சதவீத வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த வழிவகை செய்யப்படும். முதுமலை பகுதியில் அதிநவீன யானைகள் பாதுகாப்பு  மையம் ஏற்படுத்தப்படும். வனப்பகுதியில் உள்ள அந்நிய செடிகளை அழிக்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது.

மலை காய்கறி விவசாயத்தை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்  விளைபொருட்களை சேமித்து வைக்க பதப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்படும். அதேபோல், சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூடலூரில் உள்ள செக்சன் 17 நிலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். கோத்தகிரி, மஞ்சூர், குன்னூர் உள்ளிட்ட இடங்கள் அடங்கிய நீலகிரி பிளான் ஏரியா 1 என்று அறிவித்து நீலகிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரியை பாதுகாப்பது என்பது தமிழகத்தை பாதுகாப்பதற்கு ஒப்பானது. எனவே, இந்த அரசு மலைகளை, மக்களை காப்பாற்றும். இயற்கையைக் காக்கும் அரசு. இது திராவிட மாடல் அரசு. இது அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும். மக்களின் வரவேற்பு எனக்கு இன்னும் உத்வேகத்தை தரும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன், எம்.பி. ராசா, ஊட்டி எம்எல்ஏ கணேசன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

* பழங்குடியினர் பாசையில் பேசி அசத்திய முதல்வர்
ஊட்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பழங்குடியின மக்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு நேரடியாக சென்று சந்தித்தார். அப்போது அவரிடம் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். தொடர்ந்து அவர் மேடையில் வரவேற்று பேசுகையில், நீலகிரியில் வாழும் தோடர் மற்றும் கோத்தர் பழங்குடியின மக்களின் மொழியிலும், படுகர் இன மக்களின் மொழியிலும் பேசி அசத்தினார். அப்போது அரங்கம் அதிர கரகோஷம் எழுப்பி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

* டூரிஸ்ட் கைடுகள், டிரைவர்கள் நல வாரிய உறுப்பினர்களாக்கப்படுவர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் நீலகிரி மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டூரிஸ்ட் கைடுகளாக, குதிரை சவாரிக்கு அழைத்து செல்பவர்களாக, சிறு உணவகங்களில்  வேலை செய்பவர்களாக, வாடகை கார் ஓட்டுபவர்களாக மற்றும் சிறு வியாபாரிகளாக  என சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை எல்லாம் முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கி தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களாக சேர்த்து, அவ்வாரியத்தின் அனைத்து  வகையான நலத்திட்டங்களையும் பெற வழி வகை செய்யப்படும்’’ என்றார்.

* கலெக்டரை தாங்கி பிடித்த முதல்வர்
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கலெக்டர் அம்ரித் நினைவு பரிசு வழங்குவதற்காக மேடையில் முதல்வரை நோக்கி சென்றார். அப்போது சற்றும் எதிர்பாராமல் கலெக்டர் நிலை தடுமாறினார். அவர் கீழே தவறி விழுந்து விடாமல் முதல்வர் உடனடியாக தாங்கி  பிடித்தார். இது அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

* அரசு கலை கல்லூரிக்கு திடீர் விசிட்
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 4,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார். அவரை கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். அங்குள்ள பழைமை வாய்ந்த கட்டிடங்களை சுற்றி பார்த்தார்.
தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

* ஜான் சல்லிவன் சிலை திறப்பு
ஊட்டி நகராட்சியினை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த, அப்போது நீலகிரி கலெக்டராக இருந்த ஜான் சல்லிவனை நினைவுகூரும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில், நகராட்சிக்கு சொந்தமான முக்கோண வடிவ இடத்தில் அவருக்கு மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஊட்டி-200 தொடர்பான புத்தகத்தையும் வெளியிட்டார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Ooty , Product storage center to be set up to promote hill vegetable farming: Chief Minister MK Stalin's speech on welfare assistance in Ooty
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...