ஏற்றுமதி சார்பு நிறுவனங்களுக்கு 2018-19ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகள்: சென்னை மெப்சில் விழா நடக்கிறது

சென்னை: 2018-19ம் ஆண்டிற்கான ஏற்றுமதி சிறப்பு விருதுகள் செஸ் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு சென்னையில் நாளை வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சிறப்பு பொருளாதார மண்டலம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி நிறுவனங்களின் சேவையை அங்கீகரித்து அவர்களுக்கு விருதுகளை வழங்குகிறது. இவ்விருதுகள் 7 துறைகளின் கீழ் 25 வகையான  ஏற்றுமதி  நிறுவனங்களுக்கும் மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கும்  வழங்கப்படுகின்றன. 2018-19ம் ஆண்டிற்கான ஏற்றுமதி சிறப்பு விருதுகள் செஸ் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு 23ம் தேதி(நாளை) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு மெப்ஸ் செஸ் வளாகத்தில் வழங்கப்படுகின்றன.

விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்கிறார்.சென்னை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாலினி சங்கர் கலந்து கொள்கிறார். 2018-19ம் ஆண்டுக்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள் அதிக ஏற்றுமதி, அதிக வேலைவாய்ப்பு, அதிக முதலீடு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. மேலும், சிறப்பு அங்கீகார விருது 2018-2019 ஆண்டிற்கு அபிவிருத்தி நிறுவனங்களுக்கு கூட்டாண்மை சமூக பொறுப்பு, தூய்மை இந்தியா திட்டம், புதுப்பிக்க தக்க ஆற்றல் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகின்றது. 2018-19 ஆண்டிற்கு மொத்தம் 138 விருதுகள் நாளை வழங்கப்பட உள்ளது.

Related Stories: