மும்பை இந்தியன்சுக்கு எதிராக பாவெல் அதிரடியில் டெல்லி ரன் குவிப்பு

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராவ்மன் பாவெல் அதிரடி ஆட்டதால் டெல்லி கேப்பிடல்ஸ் கணிசமாக ரன் குவித்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். பிரித்வி ஷா, டேவிட் வார்னர் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். வார்னர் 5 ரன் எடுத்து சாம்ஸ் பந்துவீச்சில் பும்ரா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, டெல்லிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. பிரித்வி ஷா 24 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வசம் பிடிபட்டார். சர்பராஸ் கான் 10 ரன்னில் பெவிலியன் திரும்ப, டெல்லி அணி 8.4 ஓவரில் 50 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், கேப்டன் ரிஷப் பன்ட் - ரோவ்மன் பாவெல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தது. ரிஷப் பன்ட் 39 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ரோவ்மன் பாவெல் 43 ரன் (34 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர். ஷர்துல் தாகூர் 4 ரன்னில் அவுட்டானார். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. அக்சர் படேல் 19 ரன் (10 பந்து, 2 சிக்சர்), குல்தீப் யாதவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் பும்ரா 4 ஓவரில் 25 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். ரமன்தீப் சிங் 2, சாம்ஸ், மார்கண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

Related Stories: