×

தனியார் நிறுவனத்திடம் இருந்து அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.28 கோடி லஞ்சம்: லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்

சென்னை: அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம், தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.28 கோடி லஞ்சமாக வாங்கியதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகாராக அளித்துள்ளது. இதுகுறித்து, அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2015-16ல் அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஸ்ரீராம் குழும நிறுவனத்திடமிருந்து லஞ்சமாக வாங்கியதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகாராக அளித்துள்ளது. இதன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும். 2015-16ம் ஆண்டு பெருங்களத்தூர் பகுதியில் ஸ்ரீராம் குழுமத்தின் ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்பிராசிட்ரக்சர் பிரைவேட் லிட் 57.94 ஏக்கர் நிலத்தில் 1453 வீடுகள் கொண்ட உயர்மட்ட கட்டுமான திட்ட அனுமதிக்கு 2013ல் சி.எம்.டி.ஏவில் விண்ணப்பம் செய்து இருந்தனர்.

2 ஆண்டுகளுக்கு மேல் காலம் தாழ்த்தி 2016ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்ட அனுமதிக்காக ரூ.27.9 கோடி முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் லஞ்சமாக பெற்றுள்ளார். ஸ்ரீராம் குழுவின் பாரத் கோல் கெமிக்கல் பிரைவேட் லிட் என்னும் நிறுவனம் மூலம் ரூ.27.9 கோடி பணத்தை அன்செக்கியூர் லோன் என்ற பெயரில் வைத்திலிங்கம் மகன் பிரபு நிறுவனமான முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிட் நிறுவனத்திற்கு 2015-16ல் கொடுக்கப்பட்டுள்ளது. திட்ட அனுமதியும் அதற்கான லஞ்ச பணமும் ஒரே காலகட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை பயன்படுத்தி அமைச்சர் வைத்திலிங்கம் மகன் பிரபு திருச்சியில் பாப்பகுறிச்சி பகுதியில் 4.5 ஏக்கர் நிலத்தை ரூ.24 கோடி செலவில் வாங்கியுள்ளார்.
 
முன்னாள் வீட்டுவசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் ஒரு பிளான் அப்ரூவல் செய்ய ரூ.28 கோடி பினையில்லாத கடன் என்ற பெயரில் வாங்கியுள்ளார் என்றால் அந்த காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து திட்ட அனுமதிகளுக்கும் எவ்வளவு தொகை வாங்கப்பட்டது. இந்த பணம் திட்டம் அனுமதிக்காக மட்டும் கொடுக்கப்பட்ட லஞ்சமா அல்லது கட்டுமானத்தில் சட்டத்திற்கு புறம்பாக விதிமீறல் செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும். அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது. எனவே, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஸ்ரீராம் குழுமம் மற்றும் வீட்டுவசதி துறை, சி.எம்.டி.ஏ உள்பட ஊழலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்.


Tags : AIADMK ,minister ,Vaithilingam , AIADMK ex-minister Vaithilingam receives Rs 28 crore bribe from private sector: Complaint lodged with anti-corruption department
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...