×

பாரம்பரிய ரயில் நிலையங்களை புதுப்பிக்க திட்டம் ரூ.82 கோடியில் நவீனமயமாகிறது கன்னியாகுமரி ரயில் நிலையம்: விவேகானந்தர் மண்டபம் போல் முகப்பு வடிவமைப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் ரயில் நிலையம் ரூ.82 கோடியில் நவீனமயமாக்கப்பட உள்ளது. இதன் முகப்பு தோற்றம் விவேகானந்தர் மண்டபம் போல் வடிவமைக்கப்பட உள்ளது.  நாடு முழுவதும் உள்ள பாரம்பரியமிக்க ரயில் நிலையங்களை புதுப்பித்து அதன் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தலைமையிலான குழுவினர் செயலாக்க திட்டத்தை தயாரித்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி சந்திப்பு, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.2000 கோடியில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கன்னியாகுமரி ரயில் நிலையம் ரூ.82 கோடியில் நவீனமயமாக்கப்பட உள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு, ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசிக்கிறார்கள். நாட்டில் ஒரு கோடிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடங்களில் கன்னியாகுமரி முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனாவுக்கு பிறகு இந்த நிலை சற்று மாறி, தற்போது தான் மெல்ல, மெல்ல எழுந்து வருகிறது. கன்னியாகுமரி ரயில் நிலையம், தென்னக ரயில்வே துறையின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. பல விரைவு ரயில்கள் கன்னியாகுமரியை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் மிக நீண்ட தூர பயண ரயில்களான திப்ருகார் - கன்னியாகுமரி விவேக் விரைவு ரயில், சுமார் 4200 கி.மீ. செல்கிறது. ஹிம்சாகர் விரைவு ரயில் 3700 கி.மீ. இங்கிருந்து செல்கிறது. சென்னை, பெங்களூர், மும்பை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு பாரம்பரிய மிக்க இந்த ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுவது பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. கடல் மட்டம் உயர்வு, பூகோள வளைவு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கன்னியாகுமரியில் இருந்து சுமார் 17 கி.மீ. தூரத்தில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த இரு ரயில் நிலையங்களுக்கும் இடைப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய வகையில் நவீனமயமாக்கும் திட்டம் அமையும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றம் கன்னியாகுமரி நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டப வடிவில் அமைக்கப்பட உள்ளது.

Tags : Rail level, Rs 82 crore, Kanyakumari, hall, design
× RELATED சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...