×

மாணவிகள் இருளை நீக்கிய வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி

நன்றி குங்குமம் தோழி

நீட் தேர்வுக்கு லட்சங்களில் பணம் செலுத்திப் படிக்கும் மாணவர்களுக்கு மத்தியில், கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இயங்கி வரும் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு நீட் தேர்வை எழுதி, மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளனர். எப்படி சாத்தியமானது இந்த வெற்றி.. குறிப்பிட்ட பள்ளியைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது..

பள்ளி, தலைமை ஆசிரியர்

ரம்யா மற்றும் பிஸ்டிஸ் பிரிஸ்கா என்ற இருவரும் இன்று மருத்துவ மாணவர்களாக மாறி இருக்கிறார்கள் என்றால் அரசு வழங்கிய 7.5 சதவிகிதம்தான் முழுக் காரணம். இதனால்தான் இன்று இந்த மாணவிகளின் மருத்துவக் கனவு சாத்தியமானது. இதை மறுப்பதற்கில்லை. இதன் மூலமாக எங்கள் பள்ளிக்கும் நல்ல அடையாளமும், அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது எங்களுக்கு ரொம்பவே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எங்கள் பள்ளி மலையடிவாரத்தில் இயங்கும் கிராமப் பள்ளி.

இங்கிருந்து நகரத்தை அடைய 20 கிமீ பயணிக்க வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 872. இதில் மலைவாழ் மக்களான இருளர் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளே அதிகம். இவர்கள் மட்டுமே 175பேர் இங்கு படிக்கிறார்கள். இவர்களுடன் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பி.சி மற்றும் எம்.பி.சி மாணவர்களும் கலந்து படிக்கிறார்கள். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மீடியமும் இந்தப் பள்ளியில் உள்ளது.

கடந்த ஆறு வருடமாக நான் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளேன். இது இன்று நேற்று உடனடியாக வந்த வெற்றி இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே போட்ட அடித்தளம். எனக்கு முன்னாள் இருந்த தலைமை ஆசிரியரால் போட்ட விதை. எங்க பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் உழைப்புக்கு கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரமாகவே நான் இதைக் கருதுகிறேன். பெற்றோர், ஆசிரியர் கழகமும் இதற்கு மிகப் பெறும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

கடந்த 8 ஆண்டுகளாக 10ம் வகுப்பு தேர்வில் எங்கள் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சியும், 12ம் வகுப்பில் 10 முறை 100 சதவிகிதம் தேர்ச்சியும் வாங்கி இருக்கிறது. இங்கு படித்த மாணவர்கள் வேறு இடத்திற்கு சென்று படித்தாலும், தொடர்ந்தது நாங்கள் அவர்களின் மேல்படிப்புக்கு உதவியாக இருந்து வருகிறோம்.வி.ஐ.டி கல்லூரியில் வருடத்திற்கு கிடைக்கும் இரண்டு ஃப்ரீ சீட்டில் எங்கள் பள்ளி மாணவர்கள் 11 பேர் படித்து வருகிறார்கள். இதில் 4 பேர் வளாகத் தேர்வில் தேர்வாகி பணிக்கு சென்றுவிட்டார்கள்.

நீட் தேர்வு வருவதற்கு முன்பே எங்கள் பள்ளியில் இருந்து இரண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகிச் சென்றுள்ளார்கள். அதில் ஒரு பெண் 191 கட் ஆஃப் மார்க் எடுத்து அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்து எங்கள் பகுதியிலே மருத்துவராகியுள்ளார். மாணவர் ஒருவர் 196 கட் ஆஃப் மார்க் எடுத்து மருத்துவம் முடித்து, இப்போது மணிப்பூர் மாநிலத்தில் எம்.டி. படித்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு நாங்கள் உறுதுணையாக இருந்து வருகிறோம். மலைவாழ் இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் சென்ற ஆண்டு ஒரு ஜே.யி.யி தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி
என்.ஐ.டி.ல் படித்து வருகிறார்.

மாணவி ரம்யா மலைவாழ் மக்களில் இருளர் இனத்தைச் சேர்ந்தவர். கல்வி விழிப்புணர்வே இல்லாத ஒரு சமூகம் அது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு பெற்று வாழ்க்கையை மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்தப் பிரிவில் இருந்து வரும் முதல் பெண் மருத்துவர் இவராகத்தான் இருக்குமென நினைக்கிறேன். மாணவி ரம்யாவின் பெற்றோர் தோட்ட வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள். குடியிருக்க அவர்களுக்கு சரியான வீடில்லை. அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு குடியிருக்கிறார்கள். வீட்டில் மின்சார இணைப்பு இல்லை. மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில்தான் ரம்யா +2 வரை படித்தார். நீட் தேர்வையும் அப்படித்தான் எதிர்க்கொண்டார். கைபேசி மற்றும் இணைய வசதிகளும் அவரிடத்தில் இல்லை.

அருள் சிவா, தமிழாசிரியர்,

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை பள்ளியிலே உணவு கொடுத்து சிறப்பு வகுப்புகளை நடத்தி படிக்க வைத்து வருகிறோம். அனைத்து ஆசிரியர்களுமே மாணவர்களோடு ஒவ்வொரு நாள் கட்டாயம் இருந்து அவர்களின் சந்தேகங்களைப் போக்கி படிக்க வைக்கிறோம். இதில் பள்ளியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகம் உதவியாய் இருந்து முன்னெடுக்கின்றனர். 10 மற்றும் +2 தேர்வில் எங்கள் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் 60 சதவிகிதத்திற்கு மேல்தான் இருக்கிறது. சிறப்பு வகுப்பு மூலம் 80 சதவிகிதம் எடுக்க வைக்க முயற்சிக்கிறோம்.

இந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்குத் தேர்வான ரம்யா, பிஸ்டிஸ் பிரிஸ்கா இருவருமே 8வது படிக்கும்போதே மத்திய அரசு நடத்தும் என்.எம்.எம்.எஸ். தேர்வெழுதி தேர்ச்சி பெற்று மாதம் 500 ரூபாய் உதவித் தொகை பெற்று வந்தனர். இருவரும் எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும், மிகவும் நன்றாகப் படிக்கும் மாணவிகள்.

நாங்களும் அவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினோம். 40 மாணவர்கள் எங்கள் பள்ளியில் +2 தேர்வு எழுதியதில் 4 மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வை எழுதும் ஆர்வமிருந்தது. அதிலும் இந்த இருவர் மட்டுமே நீட்டை உடைத்து வெளியில் வந்திருக்கிறார்கள் என்றால், இவர்களிடத்தில் ஆர்வமே காரணம்.  மேலும் இரண்டு மாணவர்களை கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டு சேர்த்துள்ளோம்.

மொத்தம் 9 ஆசிரியர்கள் உள்ள எங்கள் பள்ளியில் பொருளாதாரப் பாடத்தை நடத்த பொருளாதார ஆசிரியர் இல்லை. நான் தமிழாசிரியர்தான் என்றாலும், பொருளாதாரம் படித்திருப்பதால் தமிழோடு பொருளாதாரத்தையும் சொல்லித் தருகிறேன். மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். எங்கள் பள்ளி மூலமாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாவது உருவாக்காமல் நாங்கள் விடமாட்டோம் என மகிழ்ச்சியோடு விடைபெற்றார்.

பிரபாகரன், மாணவர்

பிஸ்டிஸ் தந்தை நான் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவன். தையல் தொழில் செய்து வருகிறேன். எனக்கு மூன்று பிள்ளைகள். என் மகள் பிஸ்டிஸ் பிரிஸ்கா மூத்தவள். நீட் தேர்வில் 187 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தாள். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பெரம்பலூர் தனலெட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

என்னைபோல் என் பிள்ளைகள் வளரக் கூடாது. அவர்களாவது படித்து முன்னேறி எங்கள் சமுதாய மக்களை முன்னேற்ற வேண்டும். அதற்கு படிப்பு மட்டுமே ஒரே வழி என்பதை எனது பிள்ளைகளிடத்தில் அழுத்தமாக விதைத்தேன். அவர்கள் படிக்கும்போது பெற்றோராகிய நாங்களும் கூடவே அமருவோம். குறிப்பாக எனது மூன்று பிள்ளைகளையும் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்ததில் எங்களின் பாரம் வெகுவாகக் குறைந்தது. அந்த அளவுக்கு அது தரமான சிறந்த பள்ளி. குறிப்பாக இந்த பகுதியைச் சுற்றியுள்ள எளிய மக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியாக சிறந்து விளங்குகிறது.

தங்கள் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் பெற்றோர் மாதிரியே நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள். மாணவர்களை உயர்த்த நிறையவே முயற்சி எடுக்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். விளையாட்டு ஆசிரியராக  இருந்தாலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தையும் அவர் கற்றுத் தருகிறார்.

மலைவாழ் மக்களின் குழந்தைகள் அதிகம் படிக்கும் இந்தப் பள்ளியில், ரம்யாவைப்போல் நூற்றுக்கணக்கான ரம்யாக்கள் இங்கு படித்து வருகிறார்கள். இந்த மாதிரிப் பிள்ளைகளைத்தான் வெள்ளியங்காடு அரசு பள்ளி தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் முனைப்போடு மாற்றிக் காட்டுகிறார்கள். ஆசிரியர்களின் ஈடுபாடுதான் பிள்ளைகளை இந்த அளவுக்கு உயர்த்தி வெளியே கொண்டு வருகிறது.

எனக்குத் தெரிந்து, உயிரியல் ஆசிரியர் ஒருவர் ஆங்கில மீடியத்தில் படித்த தனது பிள்ளையின் சான்றிதழைப் பெற்றுக் கொண்டுவந்து வெள்ளியங்காடு அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறார். சேர்ப்பதற்கு முன்பு, என்னையும் எனது மகள் பிஸ்டிஸ் சந்தித்துப் பேசினார் என முடித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படாத நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்வுக்கான பாடங்கள் தமிழ் மொழியிலும் வழங்கப்படவேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை அரசு மேலும் செம்மைப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளியில் பயிலும்  மாணவர்களை ஊக்குவித்து வெளிக்கொண்டு வர வேண்டியது அரசின் கடமை.

ரம்யா, மாணவி

வெள்ளியங்காடு மலை அடிவாரத்தில் இருந்து மேற்கே 3 கி.மீ தொலைவில் என் குடியிருப்பு. தினமும் நடந்தே பள்ளிக்கு வருவேன். என் பெற்றோர் தோட்ட வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள். எனக்கு கீழ் 2 தங்கைகள். +2 வரை தமிழ் வழியில்தான் படித்தேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 438 மதிப்பெண்களும், +2ல் 600க்கு 421 மதிப்பெண்கள் கிடைத்தது.

ஆசிரியர்களின் உதவியோடு +1, +2 பாடப் புத்தகங்களை வைத்துப் படித்தே நீட் தேர்வை எழுதினேன். நான் வசிக்கும் பகுதியில் இணைய தொடர்பு இன்மையால், கொரோனா நோய் தொற்று நேரத்தில் அரசு நடத்திய ஆன்லைன் வகுப்புகளில் என்னால் பங்கேற்க முடியவில்லை. நீட் தேர்வில் என் மதிப்பெண் 145. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் எனக்கு கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

கல்விச் செலவை அரசே ஏற்கும் அறிவிப்பு வரும்வரை, எங்களுக்கு பணம் கட்டுவதில் பெரும் மலைப்பு இருந்தது. என் பெற்றோர் கலங்கி நின்றார்கள். படிப்புச் செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கி றோம். நீங்கள் கட்டாயம் மருத்துவப் படிப்பில் இணைய வேண்டும் என தலைமை ஆசிரியரும், தமிழ் ஆசிரியரும் உடன்  இருந்து கல்லூரி இடத்தை உறுதி செய்ய தைரியம் கொடுத்தார்கள். நீட் தேர்வு எழுதவும், சென்னையில் அரசு நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்கவும், கல்லூரியில் இணையும்வரை கூடவே பக்க பலமாக நின்று எனது பள்ளி தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் பெரும் உதவியாக இருந்தார்கள்.

பிஸ்டிஸ் பிரிஸ்கா, மாணவி

பெற்றோர் தையல் தொழிலாளர்கள். எனக்கு ஒரு தம்பியும் தங்கையும். மேட்டுப்பாளையம் அருகே தாயனூர் என்கிற குக்கிராமம் என்னுடையது. +2 வரை வெள்ளியங்காடு அரசு உயர் நிலைப்பள்ளியில் படித்தேன். நான் 6வது படிக்கும்போது என் பள்ளியில் ஆங்கில மீடியம் வரவே நான் தமிழ் மீடியத்தில் இருந்து ஆங்கில மீடியத்திற்கு என்னை மாற்றிக் கொண்டேன்.

8ம் வகுப்பு படிக்கும்போது மத்திய அரசு நடத்தும் என்எம்எம்எஸ் நேஷனல் மெரிட் தேர்வை எழுதி வெற்றி பெற்றதில் எனக்கும், ரம்யாவுக்கும் மாதம் 500 ரூபாய் அரசு உதவித் தொகை கிடைக்கிறது.10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 481 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக வந்தேன். +2ல் பயோ மேத்ஸ் எடுத்துப் படித்ததில் 600க்கு 487 மதிப்பெண்கள் எடுத்தேன். உனக்கு திறமை இருக்கு நீட் தேர்வை எழுது என பள்ளி ஆசிரியர்கள் ரொம்பவே ஊக்குவித்தார்கள்.

நீட் தேர்வுக்கென தனியாக எதுவும் பயற்சி எடுக்கவில்லை. அரசு வழங்கிய பயிற்சியில் ஆன்லைன் மூலமாகவே படித்து எழுதினேன். வார இறுதியில் அரசு தரும் மாதிரி வினாத்தாளை கொடுத்து பள்ளியில் எங்களைத் தேர்வு எழுத வைத்தார்கள். நாங்கள் பாடத்தில் எப்போது சந்தேகம் கேட்டாலும் விளக்கம் கொடுப்பார்கள். தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் எங்களுக்கு முழு ஒத்துழைபபு கொடுத்து படிக்கத் தூண்டினார்கள். இறுதிவரை எங்களுக்கு ஆதரவாக நின்றார்கள்.

நீட் தேர்வில் 167 மதிப்பெண்கள் எடுத்து நான் தேர்வானேன். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகிதத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அந்த மகிழ்ச்சியான செய்தியும் வெளியானது. கலந்தாய்வுக்கு செல்கிறவரை எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்தான் கார் எடுத்து பெட்ரோல் நிரப்பி பெற்றோர்களோடு எங்கள் இருவரையும் இங்கிருந்து அழைத்துச் சென்றார். சென்னையிலும் எங்களை அறை எடுத்து தங்க வைத்து தேவையான உதவிகளை ஆசிரியர் உடனிருந்து செய்து கொடுத்தார்கள்.

தமிழக அரசு கல்விச் செலவை முழுமையாக ஏற்பதற்கு முன்பு, அரசு தரும் உதவித் தொகையோடு மேலே தேவைப்படும் பணத்தை பள்ளியில் ஏற்பாடு செய்து தருகிறோம் எந்தக் கல்லூரி கிடைத்தாலும் எடுத்துவிடலாம். பணம் குறித்து இப்போதைக்கு யோசிக்க வேண்டாம் என எங்கள் ஆசிரியர்கள் எங்களிடத்தில் சொன்னார்கள். தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் கல்லூரி அட்மிஷின்வரை உடனிருந்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்கள்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Velliyankadu Government High School ,
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!