×

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.3006 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!!

சென்னை:  தமிழகத்தில் ஊரக பகுதிகளின் தரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி ஊரக  வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக ரூ.3006 கோடி ஒதுக்கீடு  செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்.4ம் தேதி தமிழக சட்டசபையில் 2022-23ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பாக சாலை வசதி, விவசாயம், சுய உதவி குழுக்களுக்கு மரக்கன்று என மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி அத்திட்டத்தை செயல்படுத்த பிரிவு வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், விவசாய பொருட்களை சந்தைப்படுத்தவும், குக்கிராமங்களில் இருந்து பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை சென்றடையவும், 2,750 கி.மீ நீளத்திற்கான ஓரடுக்கு கப்பிச்சாலைகள், 800 கி.மீ நீளத்திற்கான சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் 800 கி.மீ நீளத்திற்கு பேவர்பிளாக் சாலைகள் ஆகியவை ரூ.1346 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.ஊரக பகுதிகளில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு செய்து, சுற்று சூழலை பாதுகாக்க 350 கி.மீ. நீளத்திற்கு வடிகால்வசதி, 25,500 சமுதாய உறிஞ்சு குழிகள் மற்றும் 1.75 லட்சம் தனிநபர் உறிஞ்சுகுழிகள் ஒன்றிய, மாநில நிதிப்பங்களிப்புடன் ரூ.431.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

நீர் மற்றும் நில வளத்தை மேம்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும், விவசாயத்திற்கான பாசன வசதியை மேம்படுத்திடவும் 10,000 தடுப்பணைகள், 5,000 பண்ணை குட்டைகள், தனி நபர் நிலங்களில் மண்வரப்பு மற்றும் கல்வரப்பு அமைத்தல் போன்ற பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒன்றிய, மாநில நிதிப் பங்களிப்புடன் ரூ.683.95 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது
ஊரக பகுதிகளை பசுமையாக்கவும் சூழலை பாதுகாக்கவும், ஊராட்சி மற்றும் அரசு நிலங்கள், அரசு நிறுவனங்கள். பள்ளிகள். கல்லூரிகள், பொது பூங்காக்கள் மற்றும் ஊரக சாலைகளின் இருமருங்கிலும் 69 லட்சம் மரக்கன்றுகள் ரூ.293 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்படும்.

மழை மற்றும் வெள்ள காலங்களில் வாய்க்கால்களின் வரப்பினை பாதுகாக்கவும், ஊரக பகுதிகளில் பனை பொருட்கள் சார்ந்த வேலை வாய்ப்பினை பெருக்கவும், 25 லட்சம் பனை விதைகள் ரூ.87.26 கோடியில் விதைக்கப்படும்.ஊரக பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், சிறு,குறு மற்றும் பட்டியலின, பழங்குடியின விவசாயிகளின் நிலத்தின் ஒரு பகுதியில் நாவல், மாதுளை, மா, பலா, சப்போட்டா, எலுமிச்சை போன்ற மரக்கன்றுகள் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 விவசாயிகள் என்ற வீதத்தில் நிலமேம்பாட்டு பணிகளோடு இணைந்து, மரக்கன்றுகள் நடும் பணி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 8.45 லட்சம் பழ மரக்கன்றுகள், ரூ.11.51 கோடியில் மேற்கொள்ளப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரசு வேலை உறுதி திட்டத்தின் கீழ் மகளிர் பங்களிப்பினை உயர்த்தவும், சுய உதவி குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் மூலம் புதிதாக 388 வட்டார அளவிலான நாற்றங்கால்கள் மற்றும் 1,500 தோட்டக்கலை நாற்றங்கால்கள் ஒன்றிய, மாநில நிதி பங்களிப்புடன் ரூ.92.12 கோடியில் ஏற்படுத்தப்பட உள்ளது.

இரும்பு சத்துக் குறைபாடில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் 3,500 புதிய முருங்கை நாற்றங்கால்களில் 21 லட்சம் முருங்கை நாற்றுகள் வளர்க்கப்பட்டு, 10.50 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா 2 மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. ஊட்டச்சத்து மிக்க சமுதாயத்தை உருவாக்கும் விதமாக ஊரக பகுதிகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பயன் பெறும் வகையில் சமூக நலத்துறையுடன் ஒருங்கிணைந்து 500 குழந்தை அங்கன்வாடி மையங்கள் ரூ.59.85 கோடியில் கட்டப்படும். இக்கட்டடங்கள் கட்டுவதில் பழங்குடியினர் அதிகளவில் வசிக்கும் குக்கிராமங்கள், கிராம ஊராட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட எதுவாகவும் திட்ட பணிகளுக்காகவும் மொத்தமாக ரூ.3 ஆயிரத்து 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu , Tamil Nadu, Day, Work, Plan, Allocation, Government of Tamil Nadu, Government
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...