×

18 ஆண்டுகளில் இல்லாத வகையில் மரணம்; குமரியில் 2021ல் 321 பேர் விபத்தில் பலி: இளம் வயதினர் அதிகம் உயிரிழப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த 2021ல் மட்டும் 321 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத வகையில் விபத்து மரணம் நிகழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவிலில் கல்லூரி ஒன்றில் சமீபத்தில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசிய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத், இந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை விட விபத்துக்களும், போதை பொருட்கள் விற்பனையும் தான் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

குறிப்பாக போதை, விபத்துக்களால் இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். பரப்பளவில் மிக சிறிய மாவட்டமாக இருந்தாலும், மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதியாக குமரி மாவட்டம் விளங்கி வருகிறது. எஸ்.பி. கூறியதை போல், மிகப்பெரிய பிரச்னையாக விபத்துக்களும், அதன் மூலம் நிகழும் உயிர் பலிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இளம் வயதினர் அதிகளவில் பலியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விபத்துக்களில் சிக்கி கை, கால்களை இழந்து தவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடக்கும் மாவட்டங்களில் முன்னணி இடத்தில் குமரி மாவட்டம் உள்ளது. இங்கு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்கள் நடந்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பெரும்பாலான விபத்துக்கள் அதிக வேகம், முந்தி செல்லுதல் போன்றவற்றால் நிகழ்ந்துள்ளது. கடந்த 2021 ல் மட்டும் 321 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 18 ஆண்டுகளில் 2021ல் தான் மிக அதிகளவில் உயிர் பலி நிகழ்ந்துள்ளது.

இவர்களில் 20ல் இருந்து 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகம் ஆவர். 45 சதவீதம் பைக் விபத்துக்கள் ஆகும். விபத்துக்களை குறைக்கும் வகையில் காவல் துறையினர் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தும் வகையில் சோதனை மேற்கொண்டு தினமும் வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். குறிப்பாக பைக்குகளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராத நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டியதாக 37,741 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 21,810 பேருக்கும், மார்ச் மாதத்தில் 16,981 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 3 மாதத்தில் மட்டும் 74,531 பேர் மீது ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கார்களில் சீட் பெல்ட் அணியாத வகையில், 3 மாதத்தில் 3490 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜனவரி மாதம் 1815 பேருக்கும், பிப்ரவரியில் 1171 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. மார்ச் மாதம் 504 பேர் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வந்து அபராதம் கட்டி உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் வரை 1001 பேர் செல்போன் டிரைவிங் செய்து சிக்கி அபராதம் கட்டி உள்ளனர். பைக்குகளில் டிரிபிள்ஸ் மூலம் வந்து 2406 பேர்  சிக்கி உள்ளனர். ஜனவரியில் இதன் எண்ணிக்கை 1083 ஆக இருந்தது. மார்ச் மாதம் 638 ஆக குறைந்துள்ளது. விபத்துக்களை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் தற்போது பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் நேரடியாகவே பள்ளி, கல்லூரிகளுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பி உள்ளார்.

சாலை விதிகளை மாணவ, மாணவிகள் கடைபிடிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என எஸ்.பி. கேட்டுக் கொண்டுள்ளார். வாகனங்களை முந்தி செல்ல வேண்டும் என்ற மனப்போக்கில் எதையும் பற்றி கவலைப்படாமல் அதிக வேகமாக பைக்கில் செல்வதால் தான் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. சாலை விதிகள் தொடர்பான முறையான விழிப்புணர்வு இல்லாமை, போதிய பயிற்சி இன்றி வாகனங்களை இயக்குதல், குடிபோதையில் பைக் ஓட்டுதல் போன்றவையும் உயிர் இழப்புகளுக்கு காரணமாக அமைகின்றன.

ஹெல்மெட் சட்டம் நடைமுறையில் இருந்தும், தலைக்காய இறப்புகளே அதிகமாக உள்ளது. அதி வேகம், முந்தி செல்லுதல் போன்றவற்றை தவிர்த்தால் விபத்துக்கள் பெருமளவு குறையும். காவல்துறையினர் மட்டும் நினைத்து இதை தடுக்க முடியாது. பொதுமக்கள், குறிப்பாக பெற்றோர் தங்களது பிள்ளைகளிடம் சாலை பாதுகாப்பு தொடர்பாக அறிவுறுத்த வேண்டும்.  பைக் ஓட்டும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்லும் போது சீட் பெல்ட் அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்தால் விபத்தில்லாத குமரியை உருவாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

83 இடங்கள் பிளாக் ஸ்பாட்
குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து அவற்றில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 83 இடங்கள் பிளாக் ஸ்பாட் ஆக கண்டறியப்பட்டு, அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கி உள்ளன. இதில் நாகர்கோவில் கோட்டத்தில் மட்டும் 23 பிளாக் ஸ்பாட் வருகிறது.

என்ெனன்ன பணிகள்?
சாலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தாமஸ் கூறுகையில், சமீபத்தில் நடந்த சாலை பாதுகாப்பு கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டன. அதன்படி வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்யும் வகையில் விபத்து பகுதியில் சாலையின் இரு பக்கத்திலும் ஒளிரும் வகையில் விபத்து பகுதி என்ற சைனிங் போர்டு வைக்கப்பட வேண்டும். வளைவான பகுதியில் எதிரே வரும் வாகனங்களை எளிதில் அடையாளம் காண கண்ணாடி (கன்வேஸ் மிரர்) பொருத்தப்பட வேண்டும்.

சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும். பாதசாரிகள் ரோட்டை கடக்க தேவையான குறையீடு செய்ய வேண்டும். கட் ரோடு மற்றும் பிரதான சாலைகள் இணைப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளில் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும் என்பது தொடர்பாக பரிந்துரை செய்து உள்ளோம் என்றார்.

ஓவர் டேக்கிங் ேவண்டாம்
விபத்துகளை கட்டுப்படுத்துவது குறித்து எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் கூறுகையில், சாலை விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தினமும் சோதனை நடத்தி ஹெல்மெட் வழக்குகள் போட வேண்டும் என்பது காவல்துறையின் நோக்கம் அல்ல. அனைவரும் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்ட வேண்டும். வீடுகளில் இருந்து கிளம்பும் போது செல்போன் எப்படி முக்கியமான பொருளாக கருதுகிறோமோ, அதே போல் ஹெல்மெட்டையும் கருத வேண்டும். ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்ட கூடாது. மேலும் ஓவர் டேக்கிங் வேண்டாம். அது போன்ற சாலை வசதிகள் மாவட்டத்தில் இல்ைல. எனவே ஓவர்டேக்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். சமீபத்தில் நடந்த விபத்துக்களுக்கு ஓவர் டேக்கிங் மிக முக்கிய காரணம் ஆகும் என்றார்.

ஐந்தரை மாதங்களில் 92 பேர் பலி
இந்த வருடத்தில் இதுவரை ( மே 16ம்தேதி வரை) 92 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு இதே  நாளில், 120 பேர் பலியாகி இருந்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உயிர் பலிகள் குறைந்துள்ளன. ஆனால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இவர்களில் படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் வரை மொத்தம் 439 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் ஜனவரி மாதம் 107 விபத்துக்களும், பிப்ரவரியில் 89 விபத்துக்களும், மார்ச் மாதம் 113 விபத்துக்களும், ஏப்ரல் மாதத்தில் 130 விபத்துக்களும் நடந்துள்ளன.

Tags : Kumari , Death not present in 18 years; 321 killed in Kumari accident in 2021: More teenagers killed
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...