×

உதகை உருவாகி 200ம் ஆண்டை கொண்டாடும் வகையில் ஜான் சலீவன் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

ஊட்டி: தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.5.2022) நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், 200 ஆண்டுகளுக்கு  முன்பு  உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த  “ஜான் சல்லிவன்” அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு வெண்கலச் சிலையினை திறந்து வைத்தார். ஜான் சல்லிவன் அவர்கள் 1788-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டனில் பிறந்தார். இவரது தந்தை ஸ்டீபன் சல்லிவன், தஞ்சை நகரில் கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பாக பணியாற்றினார். இவர் முயற்சியால் தஞ்சாவூர் மற்றும் அதனையொட்டி உள்ள இடங்களில் பல ஆங்கில வழி கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

ஜான் சல்லிவன் அவர்கள் தனது 15-வது வயதில் சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில் எழுத்தராக சேர்ந்து, 1806-ஆம் ஆண்டு தென்னாற்க்காடு மாவட்ட நீதிமன்ற பதிவராகவும், 1807-ஆம் ஆண்டு ரகசிய காப்பு, அரசியல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக தலைமை செயலாளரின் உதவியாளராகவும், 1809-ஆம் ஆண்டு மைசூரில் அமைந்திருந்த இங்கிலாந்து அமைச்சக உதவியாளராகவும், 1814-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், 1815 ஆம் ஆண்டு கோவை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அதிகாரியாகவும் பணியாற்றினார். பின்னர் ஜான் சல்லிவன் அவர்கள் 1815 முதல் 1830 வரை கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார். இவரால் 1819-ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

இயற்கை சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான் சல்லிவன் அவர்கள் 1819-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் நாள், பிரான்சு நாட்டை சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரான திரு.சேன் பாபிசூட் லூயிசுடனும், படகர் பழங்குடியினரின் வழிகாட்டுதலுடனும் உதகமண்டலப் பகுதியை அடைந்தார். சுமார் மூன்று வார காலம் அப்பகுதியைச் சுற்றிப்பார்த்த இவர் அங்கேயே ஒரு கல் வீட்டையும் கட்டினார். நீலகிரியின் முதல் கட்டடமான இக்கல்வீடு இன்றளவும் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் உள்ளது. அதன்பிறகு இப்பகுதியை கோடை இருப்பிடமாக மாற்ற எண்ணி, இந்தப் பகுதியில் நிறைய குடியேற்றங்களை உருவாக்கினார்.

மேலும், மக்கள் எளிதில் இப்பகுதியை அணுகிட 1820-ஆம் ஆண்டு சிறுமுகையில் இருந்து ஒரு புதிய தரைவழிப் பாதையையும் ஏற்படுத்தினார். பின்னர், ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் மரவகைகளை இறக்குமதி செய்து நீலகிரி மாவட்டத்தில் நட்டு, ஊட்டி நகரின் நடுவில் ஒரு மிகப்பெரிய ஏரியையும் உருவாக்கினார். மேலும், மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார். பல்வேறு பொறுப்புகளை வகித்த ஜான் சல்லிவன் அவர்கள் 1841-ஆம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெற்று, இங்கிலாந்து திரும்பி, அங்கு தனது குடும்பத்தினருடன் இறுதி நாட்களைக் கழித்தார்.

1855-ஆம் ஆண்டு தனது 66-ஆம் வயதில் இங்கிலாந்தில் உயிரிழந்தார். உதகை நகராட்சியினை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த பெருமைக்குரிய ஜான் சல்லிவன் அவர்களை நினைவுகூறும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலை முக்கோண வடிவு உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவு வெண்கலச் சிலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சா.ப.அம்ரித், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : John Salevan ,Tamil Nadu ,Chief Municipality ,K. , Chief Minister MK Stalin unveiled the statue of John Sullivan on the road leading to the Udagai Botanical Garden ..!
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...