ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு பைக் மீது லாரி மோதி சிறுவன் பலி: பொதுமக்கள் சாலை மறியல்

ஸ்ரீபெரும்புதூர், மே 21: ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று முன்தினம் இரவு பைக் மீது லாரி ேமாதியதில்  சிறுவன் பரிதாபமாக இறந்தான். சம்பவ இடத்தில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அருகே பழஞ்சூரை சேர்ந்தவர் அஜய் (25). நேற்று முன்தினம் மாலை அஜய், தனது அக்கா மகன் புகழரசு (12) என்ற சிறுவனுடன் பைக்கில், காஞ்சிபுரம் அருகே அய்யம்பேட்டையில் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரவு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். வாலாஜாபாத் சாலை வழியே சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

குன்னம் பகுதியில் சாலை வளைவில் பைக் திரும்பியபோது, எதிரே கருங்கல் ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் லாரி, பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே, லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பிவிட்டார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், 2 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் புகழரசு நேற்று காலை பரிதாபமாக பலியானான். அஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புகாரின்படி சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று காலை குன்னம் பகுதியில் உள்ள அபாயகர சாலை வளைவில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: